நிபந்தனை – சுஜாதா.

ன்பது மணிக்கே வெயில் கொளுத்திற்று. கசகசவென்று வியர்வை முதுகுக்குள், மார்பில் எல்லாம் சின்னச் சின்ன ஊசிகளாகக் குத்தியது. ஈஸ்வரிக்குப் பட்டுப்புடவை ஏன் உடுத்திக்கொண்டு வந்தோம் என்றிருந்தது.

பெரிய யானை ஒன்று முனிசிபாலிட்டி குழாயில் சமர்த்தாகத் தண்ணீர் பிடித்து முதுகில் ஆரவாரமாக வாரி இறைத்துக்கொண்டு இருந்தது. யானைப்பாகன் பீடி குடித்துக்கொண்டு இருந்தான். எதிரே கட்டை குட்டையாகக் கோபுரம் தெரிந்தது. அருகே தெப்பக்குளம். அதற்கு எதிர்ப்புறத்தில் பழங்காலத்து மரக் கட்டடத்தின் உச்சாணியில் இருந்த விநோத கடிகாரத்தையே பார்த்துக்கொண்டு பத்துப் பதினைந்து பேர் ஒன்பது அடிக்கக் காத்திருந்தார்கள். மணியடிக்கும்போது இரண்டு பொம்மை ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொள்ளுமாம். மஹாராஜா செயலாக இருந்தபோது வாங்கிப் போட்ட கடிகாரம். இப்போது மஹாராஜாவே அந்தப் பதினைந்து பேரில் ஒருவராக இருந்தால் ஆச்சர்யப்படக் கூடாது என்று சோமசுந்தரம் எண்ணினான்.

”கோயிலுக்குப் போயிரலாமே முதல்ல” என்றாள் ஈஸ்வரி.

 

”இத பார்… எனக்குப் பசிக்குது. காலைல எழுந்து ஒரு காபி சாப்பிட்டது. ஒண்ணு ரெண்டு பிளேட் இட்லி தின்னாத்தான் வண்டி ஓடும்.”

”எங்க வந்தாலும் சாப்பாடுதான் உங்களுக்கு.”

”என்ன செய்யறது. வேளைக்கு வேளை செய்து போட்டு என்னைக் கெடுத்துவெச்சிருக்க.”

சோமசுந்தரம் காரை அந்தக் கட்டட நிழலில் நிறுத்தினான். மூஞ்சியைப் பார்த்து சுமார் என்று சொல்லக்கூடிய ஓர் ஓட்டலில் நுழைந்தார்கள். கல்லாவில் ஊதுபத்திப் பட்டைகள் அடுக்கியிருந்தன. பத்திரிகைகளின் இந்த வார அட்டைப் படப் பெண்மணி கேரளத்துத் தேங்காய்களை நினைவுபடுத்தினாள். குலைகுலையாகச் செக்கச் சிவந்த வாழைப் பழங்கள் தொங்கின. மரவள்ளியும் பலாவும் வறுவலாகப் பாலிதீன் பைகளில் அடங்கியிருந்தன. கமல்ஹாசனுக்குக் கீழே மலையாளத்தில் நண்டு நண்டாக ஏதோ எழுதியிருந்தது.

”எந்தா வேண்ட?” என்றான். காதில் பென்சில்.

”எனக்கு மலையாளம் தெரியாது. தமிழ்தான்.”

”சாரமில்லா… பரயு…”

”என்னத்தைப் பரயறது. ஈஸ்வரி, நீ என்ன சாப்பிடற?”

”எனக்கு ஒண்ணும் வேண்டாம். சாமி கும்பிட்டுட்டு அப்புறம் சாப்பிடலாம்னு இருக்கேன்.”

”சரியாப்போச்சு, மறுபடி ஓட்டலுக்கு வரணுமா?”

”ஏன்? வந்தா என்ன?” என்றாள் சற்று அழுத்தமாக.

”ஓ.கே! ஓ.கே!”

”சின்னப் புள்ளைலேர்ந்து எங்க அப்பாம்மா கத்துக்கொடுத்திருக்காங்க, சாமி கும்பிட்டுட்டுச் சாப்பிடணும்னு. உங்களுக்கு அது மூடநம்பிக்கையா இருக்கலாம். வேணா…”

”சேச்சே. இந்தச் சின்ன விஷயத்துக்குச் சண்டையைத் துவங்காதே. சரி… ஏம்ப்பா எனக்கு முதல்ல மூணு இட்லி, வடை. அப்புறம் பச்சைத்தண்ணி; பச்சைவெள்ளம். சுக்கைப் போட்டுக் காய்ச்சி மஞ்சளா ஒரு வெள்ளம் கொண்டுவெப்பிங்களே… அது வேண்டா. கேட்டோ?” என்றான்.

கணவனின் மலையாள முயற்சிகளில் சிரிப்பு வந்தது ஈஸ்வரிக்கு. கோபம் போய்விட்டது.

”முணக்குன்னா கோபமா?” என்றான்.

”பின்ன என்னவாம். நான் எது சொன்னாலும் அதுக்கு எதிராச் சொன்னா?”

”சரி! இன்னிக்கு ஒரு பிராமிஸ். நீ என்ன சொன்னாலும் சரி சரி. மறுப்பே தெரிவிக்க மாட்டேன். வெளியூர்ல ஓட்டல்ல வந்து எதுக்காகச் சண்டை போடணும்?”

சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது, ஈஸ்வரி அந்த அம்மாளைப் பார்த்தாள். பிராமண மாது. நாற்பது இருக்கலாம். கிழிந்த நார்ப்பட்டில் ஜாதிக்கட்டு; ரவிக்கையில் ஒட்டு; நெற்றியில் வெறுமை. நரை இழையோடிய தலை ஒரு சின்னத் தேங்காய் போல இருந்தது. அவர்களை அணுகி சன்னமாகப் பிச்சை எடுத்தாள். தயக்கமாகக் கை நீட்டி ஹாஸ்யமில்லாமல் சிரித்து மெல்லிய குரலில், ”அம்மா மஹாலட்சுமி, ஏதாவது காசு தாயேன்” என்றாள். பற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சோழிகள்.

அவள் ஒரு காலத்தில் செல்வாக்காக இருந்து நொடித்துப்போய் பிச்சை எடுக்க வந்திருக்க வேண்டும் என்பது அவள் தோற்றத்திலும் கூசிக் குறுகிய தயக்கத்திலும் வெளிப்பட்டது.

சோமசுந்தரம் அவளுக்கு நாலணா கொடுத்தான்.

அவள் அதை வாங்கிப் பார்த்து, ”நாலணா போறாதுப்பா. குழந்தை பசியாக் கிடக்கிறாள். நானும் பட்டினி” என்றாள்.

”எவ்வளவு தரணும்கறிங்க பாட்டி?” ‘பாட்டி’ என்று அழைத்தது அசம்பாவிதமாக இருந்தாலும் ‘மாமி’ என்று அழைத்துத் தனக்கு ஒரு அவசியமில்லாத பிராமணத்தன்மையை வரவழைத்துக்கொள்ள சோமசுந்தரம் விரும்பவில்லை.

”ஒரு ரூபா கொடுத்தா எதிர்த்தாப்ல காபி கிளப்பில் ஒரு முழுச் சாப்பாடு கிடைக்கும். நானும் என் பெண்ணும் சாப்பிடலாமாக்கும்” அவள் தமிழில் மலையாள உச்சரிப்புத் தென்பட்டது. பாலக்காடாக இருக்கலாம்.

”இத பாருங்க… உங்களுக்கு ஒரு ரூபா கொடுத்தா உங்க வாழ்க்கைப் பிரச்னை தீர்ந்துபோயிடப் போறதில்லை. கொடுக்கிறத வாங்கிட்டுப் போங்க பெரியம்மா! வேற மூணு நாலு ஆளுங்ககிட்ட கேட்டா ஒரு ரூபா. அவ்வளவுதான்!” என்று சோமசுந்தரம் நடந்தான். ஈஸ்வரி சற்றுத் தயங்கினாள்.

”அம்மா மகாலட்சுமி; ஜகதீஸ்வரி; பூவும் பொட்டுமா அழகாத் தங்கமாட்டமா இருக்கியே. உனக்குத் தங்க விக்கிரகம் மாதிரி ஒரு புள்ளை பொறந்து எல்லாரும் செழிப்பா இருப்பீங்க. ஒரு ரூபா கொடுத்துட்டுப் போம்மா ராஜாத்தி.”

கணவன் அங்கிருந்து, ”அவகூட என்ன பேச்சு? வா வா!” என்று அவசரப்படுத்தினான். ஒரு கடைக்குள் நுழைந்தான். ”தொந்தரவு பண்ணாதிங்கம்மா, போங்க!” என்று ஈஸ்வரி நடக்க, அந்தப் பெண்மணி தொடர்ந்து கடைவாசல் வரைக்கும் நீட்டிய கையுடன் வந்தாள்.

கடைக்குள் ஆயிரம் உதவாக்கரை சாமான்கள் இருந்தன. எத்தனைவிதமான மர யானைகள். மரம் இழுக்கும் யானை, சேவிக்கும் யானை, ஏன்… யானை மேல் யானையைக்கூட விட்டுவைக்கவில்லை.

”என்ன, போனாளா?”

”இல்லீங்க. பாவம் அய்யர் சாதி.”

”ஆமா! அய்யர் சாதிதான். அதுக்குன்னு ஜாஸ்தி பணம் குடுக்கணும்கறியா? பிச்சைலேகூட வர்ணாச்சரம தர்மமா? இந்த யானை என்ன விலைங்க?”

”சட், அது வேண்டாங்க. புத்தி போவுது பாரு!”

”விலை கேட்டேன்! திருவனந்தபுரத்துக்கு வந்ததுக்கு ஞாபகமா யானை வாங்கிட்டுப் போக வேண்டாமா?”

”அது நல்லா இருக்குதில்ல?” என்று நீண்ட சதுரப்பாயின் மேல் தத்ரூபமாக ஒரு யானை வரையப்பட்டிருந்ததைக் காட்டினாள். ”ஹாலில் அலங்காரமா தொங்கவிடலாம். என்னப்பா விலை?”

பதினெட்டு ரூபாய் கொடுத்து அதை வாங்கிச் சுருட்டிக்கொண்டு கடைக்கு வெளியே வரும்போது, அந்த அம்மாள் இன்னும் நின்றிருந்தாள். அதே அரைக்கை நீட்டல். அதே அசட்டுச் சிரிப்பு. ஏழ்மையின் தங்க மெடல்கள். ஈஸ்வரிக்குக் குற்ற உணர்வு உறுத்தியது. ‘பதினெட்டு ரூபாய் கொடுத்து அலங்கார சாமான் வாங்குகிறாய். எனக்கு நாலணாவுக்குக் கணக்குப் பார்க்கிறாய்!’ என்று அவள் பார்வையே கேட்பது போல் தோன்றியது.

கணவன் கவனிக்காமல் காரை நோக்கி நடந்துகொண்டு இருக்க, ஈஸ்வரி இரண்டாம் முறை தயங்கி யோசித்தாள்.

”பாட்டி, உங்க பேர் என்ன?”

”அலமேலும்மா.”

”எந்த ஊர் நீங்க?”

”வடக்கே திருச்சூர்.”

”ஏன் இப்படிப் பிச்சை எடுத்துப் பிழைக்கும்படியா ஆய்டுச்சு?”

”அதை ஏண்டிம்மா கேக்கறே. எங்க தாத்தா சப்ரிஜிஸ்திராரா இருந்தார். ஆத்துல நாலு சேவகா இருந்தா. தென்னந்தோப்பும் துரவுமா காய் காய்ச்சு தாழ்வாரம் பூரா கொட்டியிருக்கும்.”

”அது சரி… இப்ப ஏன் இப்படி ஆய்டுச்சு?”

”எங்கப்பன் சொத்தையெல்லாம் அழிச்சுட்டு எங்கள நடுத்தெருவில் நிக்கவெச்சுட்டுப் போயிட்டான். சமையல்காரனுக்கு வாக்கப்பட்டேன். அவரும் போய்ட்டார். நானும் என் பெண்ணும் மட்டும் தனியா.”

”கூடப் பிறந்தவங்க யாரும் இல்லையா?”

”இருக்கான். தம்பிக்காரன் திருச்சூர்ல வாத்தியாரா இருக்கான். ஆம்படையா பேச்சைக் கேட்டுண்டு துரத்திவிட்டுட்டான்.”

”வீட்டு வேலை ஏதாவது செஞ்சு பிழைக்கிறதுதானே?”

”பிழைக்கலாம். யாராவது வேலை குடுத்தாத்தானே? அதுக்குக்கூட சிபாரிசு தேவையா இருக்கு. இல்லைன்னா, திருடிப்பிடுவேனாம். இப்பகூட ஒரு நம்பூதிரி வீட்ல கூப்ட்டிருந்தா. போறதுக்குள்ள வேற பொம்மனாட்டி வந்துட்டா. என் மூஞ்சியப் பார்த்தா திருடற மாதிரியா இருக்கு. சொல்லும்மா. ஒரே ஒரு பொண்ணு. ஸ்கூலுக்குப் போயிண்டிருக்கு. மத்யானச் சாப்பாடு ஒரு சத்திரத்துல கிடைக்கும். இன்னிக்கெல்லாம் என்ன வயசுங்கறே எனக்கு? நாப்பத்திரண்டு. பசிச்சுப் பசிச்சு அறுபது வயசாட்டம் இருக்கேன். ‘பாட்டி’ங்கறே!”

”வீட்டு வேலை எல்லாம் செய்வீங்களா?”

”பேஷா! சமைப்பேன். பத்துப்பாத்திரம் தேய்ப்பேன். மாடு கறப்பேன். இட்லி தோசைக்கு அரைப்பேன். கைக்குழந்தைக்கு எண்ணெய் தேய்ச்சுவிடுவேன். வேண்டப்பட்ட காரியம் செய்வனாக்கம், எட்டூருக்கு வேலை செய்வேன்.”

சோமசுந்தரம் கார் வரை சென்று காத்திருந்து பொறுமையிழந்து திரும்பி வந்தான். ”என்ன ஈஸ்வரி… இங்கேயே நின்னுட்டே? இத பாருங்க அய்யர் வீட்டு அம்மா, காசு கொடுத்தாச்சில்ல? பேசாம போயிட வேண்டியதுதானே?”

ஈஸ்வரி அவனைக் கவனிக்காமல், ”இப்ப எங்ககூட வர்றீங் களாம்மா?” என்றாள்.

”எங்கே?”

”மெட்ராசுக்கு. வீட்டு வேலை செய்யறதுக்கு எனக்கு ஒரு ஆள் தேவையா இருக்கு.”

”வெயிட் எ மினிட், வெயிட் எ மினிட். என்ன ஈஸ்வரி… உடனே அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் கொடுத்துர்றதா?”

”சும்மா இருங்க! பாட்டி. பெரியம்மா! உங்களால மெட்ராஸ் வர முடியுமா, சொல்லுங்க!”

அம்மாள் கண்களில் முதல் தடவையாகப் பிரகாசம் ஏற்பட்டது. ”என்னம்மா இப்படிக் கேட்டுட்டே! உடனே புறப்பட்டு வரேம்மா! கடல் தாண்டிவேணும் னாலும் வரேன்!”

”கொஞ்சம் இரு ஈஸ்வரி!”

”இன்னிக்கு மத்யானம் நாங்க கார்ல இந்த ஊரைவிட்டுக் கிளம்பி நாகர்கோவில் போறம்.”

”இன்னிக்கே வந்துர்றேம்மா!” அவள் முகம் பூரா இப்போது அந்தப் பிரகாசம் பரவியிருந்தது. ”ஆனா கோமதி?”

”கோமதி யாரு?”

”எம் பொண்ணு. பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கா.”

”எப்பத் திரும்பி வரும்?”

”ஒரு மணிக்கு.”

”நாங்க ரெண்டு மணிக்குக் கிளம்பறம். உங்க பொண்ணையும் அழைச்சுக்கிட்டு வந்திருங்க. பொட்டி படுக்கையெல்லாம் கொண்டுட்டு வந்துருங்க.”

”பொட்டியுமில்ல… படுக்கையுமில்ல. ஒத்தக் கடையில ஒண்ணு ரெண்டு பை! பிளாட்ஃபாரத்திலாக்கும் படுத்துக்கறது” கண்களைத் துடைத்துக்கொண்டாள். ”மஹாலட்சுமி மாதிரிதாம்மா வந்து சேர்ந்தே நீ! நான் நாயா உழைக்கிறேன்! உடம்பைச் செருப்பா தேய்ச்சுப் போடறேன்.”

”சரி, சீக்கிரம் போய்ட்டு வாங்க!”

”இதோ…” ஓடினாள்.

சோமசுந்தரம் மௌனமாகத் தன் மனைவியையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

”என்ன பாக்கறீங்க! வாங்க கோயிலுக்குப் போகலாம்!”

”நீ செய்றது சரிதானா? இது உனக்கே நல்லா இருக்கா? முன்னப்பின்னத் தெரியாத தேசத்துல முன்னப்பின்னத் தெரியாத பொம்பளைய கார்ல கூப்பிட்டு மெட்றாசுக்கு அழைச்சுட்டுப் போறதா?”

”காலைல என்ன சொன்னீங்க?”

”விசாரிக்க வேண்டாமா?”

”காலைல ஓட்டல்ல என்ன சொன்னிங்க?”

”மெட்ராஸ்ல கிடைக்காத பொம்பளைங்களா?”

”காலைல நீ என்ன சொன்னாலும் மறுப்பே தெரிவிக்க மாட்டேன்னு சொல்லல நீங்க?”

”அது சரி, ஆனா இந்த விஷயம்…”

”நடங்க கோயிலுக்கு.”

சட்டையைக் கழற்றி பேன்ட்டை மடக்கி அதன் மேல் வாடகை வேஷ்டி சுற்றிக்கொண்டு சோமசுந்தரம் வர, இருவரும் கோயிலுக்குள் நுழைந்தார்கள்.

”ஆம்பளைங்களுக்கு மட்டும் சட்டையைக் கழட்டணும்னு என்ன ரூல் இது?” என்ற அவன் ஹாஸ்யத்தை அவள் கவனிக்கவில்லை.

”எவ்வளவோ தடவை சாமி கும்பிடறோம். என்ன பிரயோசனம்? நடைமுறையில் ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டாம்? இந்த ட்ரிப்புக்கு இதுவரை எவ்வளவு ரூபா செலவழிச்சிருக்கம்? எத்தனை பெட்ரோல், எத்தனை சினிமா, எத்தனை ஐஸ்க்ரீம், எத்தனை கண்டாமுண்டா சாமான்கள்? ஓர் ஏழைப் பொம்பளைக்கு நாலணா குடுக்க மூக்கால அழறோம். நாம எல்லாம் மனுசங்க இல்லியா? இரக்கம் கிடையாது. வேற யாராவது பார்த்துப்பாங்கன்னு எல்லாருமே விட்டுட்டா, யார் அந்த வேறு யாராவது? கோயிலுக்குக்கூடப் போக வேண்டாங்க. இந்த மாதிரி ஒரு நல்ல காரியம் செஞ்சா அதுவே பெரிய தபஸ்!”

சோமசுந்தரம் நடந்துகொண்டே கை தட்டினான்.

இருவரும் சந்நிதிக்குள் நுழைந்தார்கள்.

கோயிலைவிட்டு வெளியே சட்டை அணிந்துகொண்டு காசு கொடுத்துவிட்டு வெளியில் இறங்கியபோது, தாடிவைத்த ஆசாமி ஒருவன் சைக்கிளில் வந்து அவர்கள் அருகில் நிறுத்தி இறங்கினான். அவனைச் சமீபத்தில் பார்த்த மாதிரி இருந்தது.

”சார், ஒரு விஷயம்.”

”ஒண்ணும் வேண்டாம்ப்பா.”

”நான் ஏதும் விக்கறதுக்கு வரலையாக்கம். எதுத்தாப்பல கடைக்காரன்தான். அம்மாவும் அந்த அலமேலுவும் கொஞ்ச நேரம் முன்னாடி என் கடை வாசல்ல பேசிட்டிருந்ததைக் கவனிச்சேன். அம்மா அவளை மெட்ராசுக்கு அழைச்சுட்டுப் போறதா சொன்னது.”

”ஆமாம். என்ன இப்ப?”

”கோவிக்க வேண்டாம். அந்தப் பொம்பளைய நீங்க கூட்டிப் போகக் கூடாது.”

”ஏன்?”

”அது செரியில்ல.”

”சரியில்லைன்னா?”

”உங்ககிட்ட பொய் சொல்லியிருக்கு. எனக்குச் செரியா காதுல விழல. கேவலமானா பொம்பள. பதினாலு வயசுல ஒரு பொண்ணு. அதைத் தெருவுல அலையவிட்டு அதை வெச்சுச் சம்பாதிக்கிறவளாக்கம் அவ!”

”மை காட்! பொண்ணு ஸ்கூலுக்குப் போறதா சொன்னாளே?”

”பொய்! ஸ்கூலாவது ஒண்ணாவது. சுத்தப் பொய். இவளுக்கு ஏகப்பட்ட கடனாக்கும். திருச்சூர்ல தம்பி இருக்கான். அவன்கூட சரியா இருக்க முடியாம ஓடி வந்தாச்சு. எங்கிட்ட இருந்தே நூத்தம்பது ரூபா கடன் வாங்கியிருக்கு. வீட்டு வேலை ஒண்ணும் தெரியாது. வெறும் கச்சடை. உடம்பெல்லாம் பொய்யி. நான் சொல்றதைச் சொல்லிட்டேன்.”

சோமசுந்தரம் மனைவியைப் பார்த்தான். ஈஸ்வரியின் முகத்தில் தீர்மானமின்மை தெரிந்தது. ”என்னங்க இப்படிச் சொல்றான்?” என்றாள்.

அப்போது அலமேலு அம்மாளும் அவள் பெண் கோமதியும் ஒரு துணி மூட்டை, கோணிப்பை, தகரப் பெட்டி சகிதம் அவர்களை நோக்கி ஆர்வத்துடன் வந்துகொண்டு இருந்தார்கள்.

”இப்ப என்னங்க செய்யறது?” என்றாள் ஈஸ்வரி. சைக்கிள்காரனைப் பார்த்ததும் அம்மாவும் பெண்ணும் பிரேக் போட்டாற்போல் நின்றார்கள்.

”வாங்க அலமேலு அம்மா! வெளியூர் கிளம்பிட்டாப்பல?” என்றான். அவள் பார்வை சரிந்தது.

சோமசுந்தரம் அந்த கோமதியைப் பார்த்தான். வளர்த்தியான பெண். பதினாலு வயசுதான் இருக்கும். குழந்தை முகம். சாயம்போன பாவாடை. சாயம்போன தாவணி. பிளாஸ்டிக் மாலை ஒன்றைக் கடித்துக்கொண்டு இருந்தாள். கன்னங்கரேல் என்று தலைமயிர். கண்கள், கொஞ்சம் கொஞ்சம் தீபா.

”என்னம்மா, இந்த ஆளு உங்களைப் பத்தி வேற மாதிரி இல்ல சொல்றார்?”

”அய்யா! அவர் சொல்றதை நம்பாதீங்க! அவருக்கு நான் பணம் கொடுக்கணும்னு என்ன என்னவோ பொய் சொல்வார். எல்லாம் பொய்! அப்படி எல்லாம் இல்ல!”

”ஏய் மூதேவி! நீ எனக்கு ஒண்ணும் பணத்தை திருப்பித் தர வேண்டாம். வெளியூர்க்காரங்களை ஏமாத்தாதே!”

”அப்ப இவர் சொல்றது நிஜமா பெரியம்மா?”

”பொய்! எல்லாம் பொய்! நான் ஏழை. ஏழை சொல் அம்பலம் ஏறாதும்பா. எல்லாரும் சேர்ந்துண்டு அழிச்சாட்டியம் பண்ணி…”

ஈஸ்வரி, கோமதியைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அந்தப் பெண் பூமியைப் பார்த்துக்கொண்டு கால் கட்டை விரலால் வட்டங்கள் வரைந்துகொண்டு இருந்தது.

ஈஸ்வரி, ”வாங்க போகலாம்” என்றாள்.

”இரு ஈஸ்வரி. இதைச் சரியா விசாரிச்சுரலாம். யார் பொய் சொல்றான்னு பார்த்துறலாம்!” என்றான் சோமசுந்தரம்.

”யார் பொய் சொன்னாலும், யார் நிஜம் சொன்னாலும் இந்த அம்மா நமக்கு வேண்டாம்!” என்றாள் தெளிவாக.

”அப்படி பட்டுனு சொல்லிட்டா எப்படி? உனக்கு உதவிக்கு வேணும்னுட்டுதானே…”

”மெட்ராஸ்லே கிடைக்காத பொம்பளைங்களா?”

”இந்த ஆள் சொல்றது எவ்வளவு தூரம் நிஜம்னு யாருக்குத் தெரியும்?”

ஈஸ்வரி கோபத்தில் வெடித்தாள். ”இப்ப நீங்க கிளம்பறீங்களா இல்லையா?”

சோமசுந்தரம் மௌனமாக காரை ஸ்டார்ட் செய்தான். மெதுவாக நகர்ந்தான். அந்த அம்மாள் அந்தப் பொண்ணுடன் கூட ஓடி வந்தாள். ”அய்யா! அம்மா! அம்மாடி! எனக்கு ஒரு வழி பண்ணிக் குடுப்பேன்னு நினைச்சேன்! ஏதோ பசிக் கொடுமையினால, அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு இல்லாத கொடுமையில தவறுதலா நேர்ந்திருக்கலாம். நீங்க மன்னிக்கக் கூடாதா? என்னை உங்காத்துல சேர்த்துக்க வேண்டாம். பட்டணத்தில் அழைச்சுண்டுப் போய் ஏதாவது ஒரு ஆசிரமத்துல ரெண்டு பேரையும் சேர்த்துடுங்கோ. புண்ணியம் உண்டு! இந்த இடத்திலிருந்து எனக்கு விடுதலை கொடுங்கோ.” தாடிக்காரனைக் காட்டி, ”இவாதான் என்னை அந்த மாதிரி பண்ணா! இவாதான் சொல்லிக்கொடுத்தா! இவாதான் சொல்லிக்கொடுத்தா!”

”ஸாரி பெரியம்மா. உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாத நிலையில் இருக்கேன்!” சோமசுந்தரம் கியர் மாற்ற கார் வேகம் பிடித்தது.

அதன் கண்ணாடி வழியாக மூவரும் நிற்பதைப் பார்த்தாள் ஈஸ்வரி. புடவைத் தலைப்பில் அழுதுகொண்டு அலமேலு; சங்கிலியைக் கடித்துக்கொண்டு காலால் தரையில் கோடிட்டுக்கொண்டு கோமதி; சற்று தூரத்தில் அவர்களை வா என்று கூப்பிடும் அந்த சைக்கிள் தாடி.

கருணைக்கும் சில நிபந்தனைகள் உண்டு! –நன்றி விகடன்

செய்திகள்

மறு – சுஜாதா.

கல்லூரி நாள்களில் திருச்சி புனித ஜோசப் கல்லூரிக்குத் தினசரி காலையில் ஸ்ரீரங்கம் ஸ்டேஷனுக்கு நடந்து போய்,ஒன்பது மணி ‘ஆபீஸர்ஸ் ரெயிலை‘ப் பிடித்து டவுன் ஸ்டேஷனில் இறங்கி, அங்கிருந்து ஆண்டார் தெரு அல்லது பட்டர்வொர்த் சாலை வழியாக மண்டபங்களை எல்லாம் தாண்டிப்போய், பத்து மணிக்குள் போய்ச் சேருவதற்குள் தினசரி அவசரந்தான். இருந்தாலும் உற்சாகமாகவே இருந்தது. மஞ்சளாக சீஸன் பாஸ் எடுத்துத் திருப்புகழ் பஜனையும் சீட்டாட்டமுமாக, அந்த வண்டியில் சன்னலோரமாக, காலரில் கைக்குட்டையைச் செருகிக்கொண்டு காவேரி வரும்போது எட்டிப் பார்ப்பதெல்லாம் குஷிதான்.

 

ஒரு விஷயந்தான் சரிப்பட்டு வரவில்லை, பாட்டி தினப்படி கைச் செலவுக்கு என்று கொடுக்கும் காசு.

ஒரு நாள் கல்லூரியிலிருந்து தாமதமாக வந்தால் ஊரைக் கூட்டிவிடுவாள். என் நண்பர்களில் எவன் படிக்க வருவான், யார் கொக்கோகப் புத்தகம் கொண்டுவருவான் என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரியும். என் புத்திசாலித்தனத்தைப் பற்றி அவளுக்குச் சந்தேகம் இல்லை. இறந்துபோன தாத்தா (அவள் கணவர்) பி.ஏ., படித்தபோதே எம்.ஏவுக்குப் பாடம் எடுத்தாராம். இது எந்த வகையிலும் சாத்தியமில்லை என்று சொல்லிப் பார்த்தும் பிரயோசனம் இல்லை.நாலணாவுக்கு மேல் கொடுத்தால் பேரன் கெட்டுப் போய்விடுவான் என்று பாட்டிக்குத் தளராத நம்பிக்கை. பெற்றோர்களை விட்டு அவளிடம் வளர்ந்ததால் என்னுடைய நற்பெயருக்குப் பாட்டி பொறுப்பேற்றுக்கொண்டு இருந்தாள்.

அவர் புத்திசாலித்தனத்தில் கால் பங்கு எனக்கு இருந்தால் போதும். ஆனால், அம்மா வழித் தாத்தா சினிமா எடுத்துத் தேர்தலுக்கு நின்று சீரழிந்தவர். அவர் சுபாவம் என்னிடம் தலைகாட்டாமல் பாதுகாக்கத்தான் கைச்செலவுக்கு நாலணா.

நாலணாவுக்கு அந்த நாட்களில் சுமாராக ‘வாங்கும் பலம்‘ இருந்தது என்று சொல்லத்தான் வேண்டும். தெப்பக்குளத்தை ஒட்டி இருந்த ‘பெனின்சுலர் கபே‘யில் ஒரு சாதா தோசையும் காபியும் கிடைக்கும். அவ்வளவுதான். சாப்பிடும் அயிட்டத்தை மாற்ற முடியாது. இனிப்புப் பட்சணம் எல்லாம் பேச முடியாது. சினிமா போக முடியாது. எட்டு நாளைக்கு காபி அல்லது தோசை என்று ஒன்றைத் தியாகம் செய்து சேர்த்து வைத்துதான் போக முடியும். இது சிரமம். எனவே, தக்க சமயங்களில் கல்லூரிக்குச் சென்று தக்க சமயங்களில் திரும்பி வந்து நல்லபிள்ளையாகவே இருந்தேன். இப்படிப்பட்டவனுக்கு மூன்று ரூபாய் முழுசாய்க் கிடைத்தால் சபலம் ஏற்படும் இல்லையா?

 

மூன்று ரூபாய்க்கு உரியவள் செவளா என்கிற வேலைக்காரி. அவளுக்கு அப்போது முப்பது வயசுக்குள்தான் இருக்கும். விதவை.

சின்னராசு என்ற அழுக்கு டிராயர் பையனை எப்போதும் உடன் வைத்திருப்பாள். காலை ஐந்து மணிக்கு வருவாள். திண்ணையில் படுத்திருக்கும் என்னைப் பாயோடு தள்ளிவைத்துவிட்டுப் பெருக்குவாள். என் மேல் நீர்த்திவலை படும்படியாகச் ‘சளக் சளக்‘ என்று வாசல் தெளிப்பாள்.

ரங்கராசு, ரங்கராசு‘ என்று என்னை இரு முறை கூப்பிட்டுப் பார்ப்பாள். அப்படியும் நான் எழுந்திருக்கவில்லை என்றால், பாயோடு சேர்த்து இழுத்துத் திண்ணையிலிருந்து கவிழ்த்து என்னை எழுப்பிவிடுவாள். நான் வேடர்கள் தூரத்துவது போல் எல்லாம் கனவு கண்டு, இறுதியில் பாழுங்கிணற்றில் விழுவதற்கு முன் எழுந்திருந்து அவளை, ‘மூதேவி, முண்டம்‘ என்றெல்லாம் திட்டுவேன்.

அவள் சிரித்துக்கொண்டு, ”என் ராசா, பள்ளியோடத்துக்கு நேரமாவுதில்லே” என்று மறு படுக்கையைப் பற்றி சிந்திக்க நேரம் தராமல் சுருட்டிவிடுவாள். உடனே, குளித்தாக வேண்டும். இல்லையேல் பல் தேய்க்கும்போதே இடுப்பு வேட்டியை உருவிக்கொண்டு போய்விடுவாள். இவளைப் பற்றிப் பல முறை புகார் செய்தும் பாட்டி இவளை அதட்டியதில்லை.

அதிகாலைப் புயல். முப்பது நிமிஷத்தில் வாசல் தெளித்து வீடு பெருக்கிப் பற்றுப் பாத்திரம், பாய்லர் தேய்த்து முடித்துவிடுவாள். வாரத்தில் சில தினங்களில் மாவு அரைப்பது, கடைக்குப் போவது போன்ற உபரி வேலைகள் எல்லாம் சேர்த்துச் சம்பளம் மூன்று ரூபாய்.

இந்த மூன்று ரூபாயைத்தான் நான் ஒரு முறை திருடினேன்.

தற்செயலாகத்தான் நிகழ்ந்தது. கல்லூரி இல்லாத ஒரு நாள் லாலிஹாலில் வழக்கம் போல் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தபோது, குல்ஸா என்கிற ரங்கநாதன், ”ஏய், நீ அவ்வளவு பணக்காரனாடா” என்று கேட்டது எனக்குப் புரியவில்லை.

”பார்டா, புஸ்தகத்தில் என்ன அலட்சியமா ரூபாயைச் செருகி வெச்சிருக்கான்?”

பார்த்தபோது எனக்குத் திக்கென்று ‘ஜூலியஸ் சீஸர்‘ புத்தகத்தில் மூன்று ஒரு ரூபாய் நோட்டுக்கள் செருகியிருந்தன.

”வேண்டாம்னா குடுத்துடுப்பா? கெயிட்டில மாட்னி போய்க்கறேன்.”

என் மனதில் எண்ணங்கள் ஓடின. எப்படி இந்த ரூபாய் என் புத்தகத்துக்குள் வந்திருக்க முடியும்? யோசித்ததில் புரிந்தது. இந்தச் செவளா கிறுக்கு சம்பளப் பணத்தை வேலை செய்யும்போது பத்திரமா இருக்கட்டும் என்று அலமாரியில் என் புத்தகத்தில் செருகி இருக்கிறாள். நான் கவனியாமல் எடுத்து வந்துவிட்டேன். ”டேய்! இந்தப் பணம் என்னுது இல்லேடா. எங்க வீட்டு வேலைக்காரி சம்பளப் பணம்” என்று சொல்வதற்குப் பதிலாக, ”வாடா, ஐ.ஸி.எச். போகலாம்” என்றேன்.

”ஏதுடா பணம்?”

”அதெல்லாம் கேக்காதே, வரயா… இல்லையா?”

ஐ.ஸி.எச். என்பது விசிறித் தலைப்பாகை வைத்துக்கொண்டு வெயிட்டர்கள் பீங்கான் கோப்பைகளில் காபி கொண்டுவரும் ‘ஒஸ்தி‘ ஓட்டல். டிப்ஸ் எல்லாம் வைக்க வேண்டிவரும். கப் காபியே நாலணா. அங்கே போய் நான், குல்ஸா, பாபு மூவரும் காபி சாப்பிட்டோம். ஸ்பென்ஸர் பக்கமாகப் பெட்டிக் கடை இருக்குமே, அங்கே போய் ‘ப்ளேயர்ஸ்‘ சிக்ரெட் பிடித்தோம். ‘பருவ மங்கை‘ என்ற புத்தகத்தை எட்டணாவுக்கு வாங்கினேன். கெயிட்டியில் ராஜ்கபூர் ‘ஆவாரா‘ படம் இரண்டாவது தடவை பார்த்தோம். இருட்டில் இன்னொரு சிகரெட் பிடித்தோம். குல்ஸா மட்டன் கட்லெட் சாப்பிடலாம் என்றான். நான்தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஒரு நாளைக்கு இத்தனை பாவங்கள் போதும் என்று தோன்றியது. மூன்று ரூபாயில் ஆறு மணி வண்டியில் திரும்பும்போது இரண்டணாதான் பாக்கி இருந்தது. அதையும் உப்புக்கடலை வாங்கித் தீர்த்துவிட்டான் பாபு. வீடு திரும்பும்போது வயிற்றுக்குள் கடபுடா.

தேர்முட்டி திரும்பியதுமே பாட்டி வீட்டு வாசலில் தெரிந்தாள். கண்ணைச் சுருக்கிக்கொண்டு நான் வருகிறேனா என்று பார்த்துக்கொண்டு இருந்தாள். அருகில் செவளாவும் காவேரி மாமியும் நின்றார்கள். அருகில் வந்ததும் காவேரி மாமியும் செவளாவும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். அதாவது நானே ‘பணத்தைக் கொண்டு போய் புஸ்தகத்தில் செருகி வைத்துவிட்டாயே? இந்தா’ என்று நிச்சயமாகத் திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்கிற எதிர்பார்ப்பில் சிரிக்கிறார்கள். நானா? முகத்தை ரொம்ப ஒன்றும் அறியாதவனாக வைத்துக்கொண்டு, ”பிராக்டிகல் இருந்ததா? அஞ்சு மணி வண்டியை விட்டுட்டேன். அதான் தாமதம் பாட்டி” என்றேன்.

”தாமதமானது கிடக்கிறது, இவ பணம் என்ன ஆச்சு சொல்லு?”

”என்ன பணம்?”

”சம்பளப் பணம்டா, செவளா உன் பொஸ்தகத்தில் செருகியிருந்தாளாம்.”

”என்ன? என் பொஸ்தகத்திலியா?” என் புத்தகங்களை எடுத்து நிதானமாகப் புரட்டிப் பார்த்தேன்.

”இல்லையே.”

”இஸ்கோலுக்குப் போவையில பாக்கலையா ராசா?” என்றாள் செவளா கலவரமாக.

”இல்லையே.”

”போக்கணங் கெட்டவளே, புஸ்தகத்தில் கொண்டுசெருகுவாளோ? எங்க விழுந்ததோ?”

”என்ன பாட்டி? என்ன சொல்றா இவ? எனக்குப் புரியவே இல்லையே.”

”ராசா, என் விதி. காலையில அச்சாபீஸ் வூட்ல சம்பளம் வாங்கினேனா? நம்ம வீட்ல செய்துக்கிட்டு இருக்கையிலே அலமாரில பொஸ்தகத்துல சொருகி வெச்சுட்டேன். அதைப் பார்க்காம அப்படியே எடுத்துட்டுப் போயிருக்கே நீ? எங்க விளுந்துச்சோ? எப்படித் தேடுவேன்?”

”நான் பாக்கலையே செவளா, பார்த்திருந்தா எடுத்துக் கொடுத்திருப்பேனே. எத்தனை ரூபா?”

”மூணு ரூபாடா ராசா! என் தலைஎழுத்து. ரேசன் அரிசியும் புள்ளைக்கு கால்சராயும் எடுக்கலாமுனுட்டு… இந்த முறையும் இல்லையா? என் விதி” என்று அழத் துவங்கியவளை என்னால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.

”பணம் போயிருச்சு. கொலுசை வெச்சுத்தான் கடன் வாங்கணும்.”

”இத பாரு செவளா, என் பேரன் இருக்கானே, அதுக்குத் திரிசமன் எல்லாம் தெரியாது. பணத்தைப் பாத்திருந்தா நிச்சயம் கொடுத்திருப்பான். நீதான் எங்கேயோ கவனம் இல்லாம போட்டிருக்கே.”

”ஐயோ! நம்ம ராசாவை எடுத்ததா சொல்லலாமா? என்ன வம்சம்! இது எடுக்குங்களா? என் ரங்கராசாவை எனக்குத் தெரியாதா? என் தலைவிதி” என்று மூலையில் உட்கார்ந்து அவள் அழுதது, தீட்டின ஈட்டியை என் உள்ளத்தில் பாய்ச்சியது போல இருந்தது.

”சே, என்ன காரியம் செய்துவிட்டோம். மூணு ரூபாயை மூணு மணி நேரத்தில் வேட்டு விட்டு என்ன சாதித்துவிட்டோம்? மாசம் முழுக்க ஓடியாடி உழைத்துச் சம்பாதித்த பணம்… கொல்லைப் பக்கம் முகம் கழுவிக்கொண்டு இருந்தபோது பாட்டியிடம் போய், ”பாட்டி நான்தான் எடுத்தேன். செலவழித்துவிட்டேன்” என்று உடனே ஒப்புக்கொள்ளும் தைரியம் வரவில்லை. பாட்டி அடித்திருக்க மாட்டாள், திட்டியிருப்பாள். திட்டட்டுமே என்ன போச்சு? ஏன் அந்தத் தைரியம் வரவில்லை?

இது நிகழ்ந்து முப்பது வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. என் வாழ்வில் பல கட்டங்களில் அந்த மறுவைப் பற்றி யோசித்ததுண்டு. செவளா என்ன ஆனாள் என்று தெரியாது. அவளைத் தேடிப் போய் மூன்று ரூபாயைத் திருப்பிக் கொடுக்கலாமா என்று யோசித்ததுண்டு. ஆடிட்டர் நண்பனிடம் ஒரு முறை கேட்டதற்குச் சுமாரான வட்டி விகிதத்தில்கூட அவளுக்கு 1,044 ரூபாய் தர வேண்டும் என்றான். ஆயிரம் ரூபாய் பெரிது அல்ல. நான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்குரிய தைரியம் பாபநாசத்தில் ஒரு மே மாதம் பாட்டி செத்துப் போவதற்கு முன்தான் வந்தது. அத்தனை வருஷங்களாயின. படுத்த படுக்கையாக என்னைக் கலங்கப் பார்த்துக்கொண்டு இருந்தவளை ”பாட்டி ஞாபகம் இருக்கா உனக்கு? நான் காலேஜ்ல படிக்கறப்ப செவளான்னு வேலைக்காரி இருந்தாளே?” என்று கேட்டு நிறுத்தினேன்.

”ஏன் ஞாபகம் இல்லாம? அவகூட ஒரு தடவை உம் புஸ்தகத்தில் ரூபாய் நோட்டை வெச்சுட்டு அதை நீ தொலைச்சுட்டயே?”

”பாட்டி, ரொம்ப நாளா உங்கிட்ட சொல்லணும்னு இருந்தேன். அன்னிக்கு அதை நான் தொலைக்கலே. வேணும்னுட்டே திருடிச் செலவழிச்சுட்டேன் பாட்டி” என்றேன்.

”எனக்குத் தெரியுமே!” என்றாள் பாட்டி.

–நன்றி விகடன்

செய்திகள்

ஓலைப்பட்டாசு – சுஜாதா.

அந்த தீபாவளி, என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதைப் பற்றி சொல்வதற்குள் தேவைப்பட்ட அளவுக்கு மட்டும் சுயபுராணம். என் பெயர் எதற்கு? நான். அவ்வளவுதான். மற்றவர் பெயர்கள் முக்கியம். அது சந்தானம் ஐயங்கார், பெருந்தேவி, சின்னா இவர்களின் பெயர்கள் இந்த கதைக்கு என்னிலிருந்து அவர்களை அந்நியப்படுத்துவதற்கு முக்கியம்.

பார்த்தீர்களா… ஆரம்பித்த விஷயத்தை விட்டு அலைகிறேனே. காரணம் – என் வயசு இன்றைக்கு எழுபது. பார்த்த மரணங்கள் ஆறு. இரண்டு மனைவிகள். ஒரு தேசிய விருது. ஒரு நாள் ஜெயில். ஒரு ப்ராஸ்டேட் ஆபரேஷன். கராஜில் நெருக்கமாக மூன்று கார்கள். உறவினரின் துரோகங்கள். தென் ஆப்பிரிக்கா டர்பனில் இரண்டு வருஷம் இவ்வாறு அதிகம் சேதப்படாமல் எழுபதை அடைந்து விட்ட ஒருவன் இறந்துபோனால் ஹிந்துவில் எட்டாம் பக்கத்தில் நான்கு வரிகளில் எழுபது வருஷமும் அடங்கி போகும்.

சொல்ல வந்தது, அந்த ஒரு தீபாவளி பற்றி. சீரங்கத்தில் என் பன்னிரண்டாவது வயதில் என் பாட்டியின் கண்காணிப்பில் வாழ்ந்தேன். அதனால் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு. அந்த தீபாவளிக்கு பட்டாசு வாங்க மொத்தம் ஐந்து ரூபாய்தான் தந்தாள். இப்போது என் வீட்டில ஐந்து ரூபாய் தாளை, தரையில் விழுந்தால் வேலைக்காரர்கள் கூட பொறுக்கமாட்டார்கள். அப்போது குறைவான பொருளாதாரத்தில் ஐந்து ரூபாயில் அதிகப்படியாக சந்தோஷம் கிடைக்க… கொள்ளிடக் கரையருகில் ஓலைப்பட்டாசு சல்லிசாக விற்பார்கள். பனையோலையில் சின்னதாக வெடிமருந்தை வைத்து முடிச்சுப் போட்டு மிகச் சின்னதாக திரியுடன், பனையோலை வாலுடன் பிரமாதமாக வெடிக்கும். ஆனால், ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். பற்ற வைப்பதற்குள்ளே வெடித்து கையை உதறவேண்டி வரும். மேலும் ஒரு வாரம் வெயிலில் காயப்போட்டே ஆகவேண்டும்.

 

பாட்டி கொடுக்கும் காசில் ஓலைப்பட்டாசு பாதப் பணத்துக்கு வாங்கிக்கொண்டு, மிச்சத்தில் கொல்லன் பட்டறைக்கு போய் ஒரு வேட்டுக் குழாயும் கந்தகப் பொடியும் வாங்கிக் கொண்டேன். இது ஒரு மாதிரி மினி வேட்டுக்குழாய். நீண்ட கம்பியின் இறுதியில் ஒரு குழலும் போல்ட்டும் இருக்கும். குழலில் மஞ்சளான கந்கத்தை கெட்டித்து அதனுள் போல்ட்டை செருகி சுவரில் மடேர் என்று ஒரு அறை அறைந்தால் கேட்கும் வெடிச் சத்தம், நம் காதில் விண்ண்ண்ண் என்று அலறும். வெடியை விட திண்ணையில் சுதேசமித்திரன் படித்து கொண்டிருக்கும் தாத்தாக்களின் பின்பக்கம் மெள்ள நழுவி, ஒரு டமால் அடித்துவிட்டு, கோரதமுட்டியை நோக்கி ஓடுவதில் உள்ள உற்சாகம்தான் மிக சுத்தமானது.

 

அந்த தீபாவளி ஓலைப் பட்டாசு காயப் போட மாடிக்கு சென்ற போது, பக்கத்து வீட்டு “எடுத்துக்கட்டி”யின் மேல் செருப்பு வைத்திருந்தது. அதில் ஏறினேன். பின்னால் யாரோ கஷ்டப்பட்டு முனகுவது போல் சத்தம் கேட்டது. உதவி தேவையோ என்று நான் சுவர் எகிறி குதித்து அந்தப் பக்கம் போய் பார்த்தபோது சந்தானமையங்கார் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, சின்னாவை  பல இடங்களில் தடவிக் கொடுத்து சிகிச்சை மாதிரி என்னவோ செய்து கொண்டிருந்தார். சந்தானமையங்கார் அடுத்த வீட்டுக்காரர். எங்களையெல்லாம் ஓட ஓட விரட்டுபவர். கிரிக்கெட் பால் உள்ளே போனால் திருப்பி தரமாட்டார். கண்டபடி திட்டுவார். அவர் வீட்டு சுந்தர் எங்களுடன் விளையாட வரமாட்டான். அவர்கள் எந்த விதத்திலோ பணக்காரர்களாம். கொலுவுக்கு சில்க் ஜமக்காளங்கள் போட்டு, பெட்ரோமாக்ஸ் வைப்பார்கள். சின்னா அவர் வீட்டு சமையல்காரி. ரவிக்கை முந்தானையில் அவள் சேகரித்து இருந்த கொய்யாக் காய்கள் சிதறிக் கிடந்தன. தரை எல்லாம் வியர்வையால் ஈரமாக இருந்தது. சந்தானயைங்காரின் செருப்புதான் ‘எடுத்துக்கட்டி’யில் மேல் வைத்திருந்தது. “என்ன மாமா பண்றீங்க “என்று கேட்டபோது அவர் திடுக்கிட்டு “இவளுக்கு உடம்பு சரியா இல்லை. மூச்சு வாங்கறதுன்னா… அதனால, தசமூலாரிஷ்டம் கொடுத்து சரி பண்றேன். போடா போடா… நீ எங்க இங்க வந்து தொலைச்சே… ஓடிப் போ” என்றார்.

“பட்டாசு காயப் போட வந்தேன். மாமியை கூப்பிடட்டுமா” என்றேன்.

“மாமி பெட்டவாத்தலை போயிருக்கா. சுவரேறி குதிச்செல்லாம் வரக்கூடாது. போலீஸ்காரன் புடிச்சுப்பான்” என்றார்.

இதையெல்லாம் கேட்காதது போல், சின்னா ஒரு மாதிரி மயக்கத்தில் கண் மூடிக்கொண்டு சற்றே நெற்றியை சுருக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

நான் வீரராகவனிடம் சொன்னேன். வீரராகவன் எங்கள் கிரிக்கெட் காப்டன். “பாவம்டா அவ. மேல்மூச்சு வாங்கிண்டிருந்தது. சந்தான மாமா தடவிக் கொடுத்தார். இல்லைன்னா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா” என்றேன்.

அவன் அதைக் கேட்டு கைகொட்டி கண்ணீர் வரச் சிரித்தான். “நீ கொக்கோகப் படம் எதும் பார்த்ததே இல்லையா? மார்கழி மாதம் உற்சவத்தில் விக்குமே?”

“இல்லை…”

அவன் “வா” என்று உள்ளே சென்று பரண் மேல் கத்யத்ரயம் திவ்யபிரபந்தசாரம் போன்ற புத்தகங்களின் நடுவே செருகியிருந்த பழுப்பான புத்தகத்தை எடுத்து பிரித்துக் காட்டினான்.

“ஆமாண்டா, இப்படித்தாண்டா சந்தான மாமாவும் சின்னாவும் இருந்தா…”

அவன் ஒரு வக்கீல் போல பல கேள்விகள் கேட்டு “இது தெரிந்ததா?”, “அது புரிந்ததா?” என்றெல்லாம் கேட்டு, அவவப்போது குபீர் குபீரென்று சிரித்து, “அடிச்சடா லக்கி ப்ரைஸ்” என்று சொன்னது எனக்கு விளங்கவில்லை. அவ்வப்போது என் நண்பர்கள் என்னை மரியாதையுடன் பார்த்தார்கள். மீண்டும் மீண்டும் அந்த காட்சியை விவரிக்க சொல்லியே வதைத்தார்கள்.

“எனக்கு எல்லாம் புரியறது. ஆனா எதுக்குடா தலைல முண்டாசு?” என்றான் பாச்சு.

“அதாண்டா ட்ரிக்கு. அதை கட்டிண்டா அடையாளம் தெரியாதாம். வேற யாரோனு நினைச்சுண்டுருவோமாம்” என்று வீரு விளக்கியது புரிந்தும் புரியாமலும் இருந்ததை அவன் என்னை ஒரு மாதிரி பார்த்து, “நீ ஒண்ணு பண்ணு. அவர்கிட்ட போய் ‘மாமா மொட்டை மாடில ஓலைப்பட்டாசு காயப்போட போயிருந்த போது உங்களையும் சின்னாவையும் பார்த்துட்டேனே. மாமி பெட்டவாத்தலைலேர்ந்து வந்தாச்சா’ன்னு… அவாள்லாம் சீட்டாடிண்டிருப்பா… அங்க போய்க் கேட்டு பாரு…”

“ஐயோ… போடா… தோலை உரிச்சுருவார்…”

“அதான் இல்லை. பாரேன் நடக்கிறதை. எதுக்கும் ஓடத் தயாராவே இரு. ஓரமா நின்னு கேட்டுட்டு வந்துரு. நடக்கிறதைப் பாரேன்.”

அவர்கள் மிகவும் கட்டாயப்படுத்த நான் மெள்ள தைரியம் பெற்று பக்கத்து வீட்டு திண்ணைக்கு நழுவி ஓரத்தில் உட்கார்ந்தேன். வெள்ளி செம்பில் காபியும், பத்தமடை பாயுமாக “ஆஸ்” ஆடிக் கொண்டிருந்தார்கள். புகையிலையை துப்பிவிட்டு வாய் கொப்பளிக்க வரும்போது என்னை பார்த்து சந்தானமையங்கர் திடுக்கிட்டு “என்னடா?” என்றார்.

“மாமா, மாடில ஓலைப் பட்டாசு பெருந்தேவி மாமி வந்தாச்சா பெட்டவாத்தலைலருந்து?” இவ்வாறு ஆரம்பித்தவுடன் “வாடா” என்று என்னை அப்படியே அலாக்காகத் தூக்கி உள்ளே செலுத்தி, என் வாயில் கல்கண்டு, அரிசி பப்ரமுட்டு, லேக்கா உருண்டை என்று இனிப்பான வஸ்துக்களை திணித்துவிட்டு “என்ன பார்த்தே, சொல்லு…”

“நீங்க சின்னாவுக்கு சிகிச்சை எதும் பண்ணலை” என்றேன்.

“பின்ன என்னவாம் அது?”

“வீரு சொல்றான் கொக்கோகமாம் அது…”

“மாமிகிட்ட சொல்லாதே, சொல்லாம இருந்தா உனக்கு என்ன வேணும் சொல்லு? சொல்லுடா கண்ணு…”

நான் யோசித்து “எனக்கு சிங்க மார்க் பட்டாசு ஒரு சரம், ஒத்தை வெடி ஒரு டஜன், ரெட்டை வெடி ஒரு டஜன், கேப்பு துப்பாக்கி, குதிரைவால், தரைச்சக்கரம், ஊசிப்பட்டாசு, ராக்கெட், ஏரோப்ளேன், விஷ்ணு சக்கரம், லட்சுமி வெடி அப்புறம் பத்த வெக்க மட்டிப்பால் வத்தி” என்று என் சக்திக்கேற்ப ஒரு பட்டியல் சொல்லிப் பார்த்தேன்.

அவர் எழுந்து அலமாரிக்குச் சென்று ஒரு காகிதத்தில் எழுதி “இதைக் கொண்டு போய் டி.பி.ஜி. கடையில கொடு. உனக்கு வேணுங்கறதை வாங்கிக்கோ. ஆனால மாடில என்ன பார்த்தே?”

“ஓலைப் பட்டாசு காயப் போடறப்ப உங்களையும் சின்னாவையும்.”

“ஏய்… யாரும் கேட்டா அங்க ஏதும் பார்க்கலைன்னு சொல்லணும்… அப்பத்தான் பட்டாசு.”

“சரி மாமா” என்றேன்.

“சரி மாமா” என்று என் தலையில் நெத்தினார்.

அந்த தீபாவளிக்கு நானும் வீரராகவனும் ஆசை தீர பட்டாசு வெடித்ததும் அல்லாமல், கார்த்திகைக்கும் நிறைய பாக்கி வைத்தோம். பாட்டி “ஏதுரா இத்தனை பட்டாசு?” என்றதற்கு “நாங்கள்லாம் சேர்ந்து சந்தா கட்டி வாங்கினோம் பாட்டி” என்று புளுகினேன்.

அடுத்த தினங்களில் நான எப்போது சந்தானமையங்காரை பார்த்தாலும் “இங்க வாடா” என்று உள்ளே பரிவுடன் அழைத்து “சர்க்கரைப் பொங்கல் சாப்பிடறியா? வறுத்த பாதாம் பருப்பு வேணுமா? அரவணை வேணுமா?” என்று தின்னக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

சில நாட்களில் தைரியம் பெற்று, “மாமா தெற்கு வாசல்ல புதுசா ஒரு பம்பரம் வந்திருக்கு. கோல் எடுத்தா கைல அப்படியே பூனைக்குட்டி மாதிரி தூங்கறது மாமா” என்றால்

“உடனே போய் ரெண்டு பம்பரமா வாங்கிக்கோ. தலையாரில குத்து பட்டா மாத்து பம்பரம் வேணுமோ இல்லையோ?” என்பார். அப்புறம் மேலும் தைரியம் பெற்று நிஜ கிரிக்கெட் பந்து, ஸ்டம்ப் எல்லாம் கேட்டுக் கூடக் கொடுத்துவிட்டார்.

பெருந்தேவி மாமி “என்ன இப்படி இந்தப் பிள்ளைக்குச் செல்லம் கொடுக்கறீங்க?” என்று கேட்டதற்கு “பையன் நன்னா படிக்கறான். அதுக்கு ஒத்தாசை பண்ணலாம்னு” என்றார் என்னைப் பார்த்து கண் சிமிட்டி.

இவ்வாறு இனிதாகக் கழிந்து கொண்டிருந்த தினங்கள் அதிகம் நீடிக்கவில்லை. வீரு “ஒரு பார்க்கர் பேனா கேட்டுப் பார்” என்று சொல்ல சந்தானமையங்கார் வீட்டுக்குள் சுதந்திரமாக நான் நுழைய மரவேலைப்பாடுகள் நிறைந்த கறுப்பு மேசை கண்ணாடியில் தெரிய விறுவிறுப்பாக தன்னை விசிறிக்கொண்டு சந்தானமையங்கார் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, பக்கத்தில் அவர் மனைவி பெருந்தேவி கோபத்துடன் அழுதுகொண்டிருக்க, அருகே ஓரத்தில் சின்னா வாயை முந்தானையால் பொத்தி அவளும் அழுது கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் மாமி “வாடா… இந்த பிராமணன் செய்த அநியாயத்தை பார்த்தாயோ… மொட்டை மாடில சின்னாவை கூட்டி வெச்சுண்டு…”

“ஏய் நீ போடா…”

“ஏண்டி அந்த பிராமணன்தான் துப்புக்கெட்டு போய் உன் கையை புடிச்சான்னா உன் புத்தி எங்கடி போச்சு? இடுப்பொடிஞ்ச சக்களத்தி, நீ நல்ல பாம்புக்குட்டி, சக்கை திங்க வந்தவளே” அதன் பின் “உனக்கு குளிர் காய்ச்சல் வர… உனக்கு பாடை கட்ட” என்று பலமாக திட்டியதில் சின்னா, “கிணற்றில் விழப் போகிறேன்” என்று புறப்பட எனக்கு அழுகை வந்து விட… “பாருங்கோ…. இந்த பிள்ளை கூட வருத்தப்படறது. உங்களுக்கு வெக்கமா இல்லை… ஓசிச் சிறுக்கி.”

நான் அழுதது அதற்காக இல்லை. சந்தானமையங்காரிடம் என் ப்ளாக்மெயில் இப்படி திடீரென்று மதிப்பிழந்து போய் விட்டதே என்றுதான்!

அடுத்த தீபாவளிக்கு பழையபடி ஐந்து ரூபாய்க்கு ஓலைப்பட்டாசு, வேட்டுக் குழாய்தான்.

அந்த தீபாவளியை மறக்க முடியாது தான். அந்த வயசிலேயே எனக்கு கொஞ்சம் அவசரப்பட்டுக் கிடைத்த சில சில ஞானங்களால் அறியாச் சிறுவன் அறிந்த சிறுவனாகிவிட்டேன். அது என் பிற்கால வாழ்க்கையை எவ்வளவு தூரம் மாற்றிவிட்டது! என் பிழைப்பே இந்த மாதிரி மற்றவர் பற்றி தகவல் அவதூறு சேகரித்து விலை பேசுவதாகி, அதைப் பயன்படுத்திக் கொண்டு பணம் சேர்ப்பதாகி விட்டது. எத்தனையோ பேரை என் நளின மூர்க்கங்களில் பயமுறுத்தி நிறையவே காசு சேர்த்து விட்டேன். இப்போது தீபாவளிக்கு என் இரண்டு மனைவியருக்கும் எட்டாயிரம் ரூபாயில் புடவை எடுக்கிறேன். என் பிள்ளைகள் தொடர்ந்து அறுபது நிமிஷம் வெடிக்கும் ஆயிரம் ரூபாய் சரமெல்லாம் வெடிக்கிறார்கள்.

நான் பண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டு, என் நாய்களுடன் பேசுகிறேன். “சீஸர், ரீட்டா… அந்த தீபாவளியன்று சந்தானமையங்காரை மாடியில் பார்த்திராவிட்டால், நான் எங்காவது பி.காம். படித்து விட்டு ரயில்வே கிளார்க்காக நிம்மதியாக இருந்திருப்பேனே!”

ஆம்! என் முதல் பொய், முதல் பெண் தரிசனம், முதல் பணம் பிடுங்கும் வழி எல்லாமே அந்த தீபாவளியில்தான் துவங்கி திருத்த முடியாமல் விகாரப்படுத்தப்பட்டேன்.

செய்திகள்

அன்று போட்ட அடிக்கல்.

கொழும்பு நகரிற்கு வடக்கே, விமானநிலையம் போகும் வழியில் அமைந்துள்ளது வத்தளை. அது கொழும்பு மாநகர எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது. கொழும்பில் வீடு வாங்குவதோ, அன்றில் வாடகைக்கு எடுப்பதோ அதிக செலவு பிடிக்கும் விடயம். அதற்குப் பதிலாக வத்தளையில் பெரிய வீடு கட்டுவதற்கு போதுமான இடம் மலிவாகக் கிடைக்கும். போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், பெருமளவு யாழ்ப்பாணத் தமிழர்கள் வத்தளையில் வந்து குடியேறி விட்டார்கள். அவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணத்தில் வசதியான வீடுகளைக் கட்டிக் கொண்டார்கள். இதனால் வத்தளை பிரதேசத்தின் சனத்தொகை ஐந்து மடங்காக உயர்ந்து விட்டது.

கடந்த இருபாண்டுகளில் புதிதாக வந்து குடியேறிய தமிழர்களை விட, குறைந்தது நூறு வருடங்களாக வாழும் தமிழ்க் குடும்பங்களும் உண்டு. “வத்தளையின் பூர்வகுடிகளான” இவர்களில் ஒரு பகுதியினரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால், தமது பூர்வீகம் யாழ்ப்பாணம் என்று கூறத் தயங்குவார்கள். இந்தப் பிரிவைச் சேர்ந்த எல்லோரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். அவர்கள் தம்மை “கிறிஸ்தவ இனத்தவர்கள்” என்று அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.
லண்டனிலும், கொழும்பிலும் “கிறிஸ்தவ இனத்தை” சேர்ந்த தமிழர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களுடனான உரையாடல், “வழக்கமான” தமிழர்களுடன் உரையாடுவதைப் போன்று அமைந்திருக்கவில்லை. லண்டனில் வதியும் கிறிஸ்தவ இனத்தவர்கள் எல்லோரும் வசதியானவர்கள். இலங்கையில் வாழ்ந்த காலத்தில் ஏதாவதொரு வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தனர். பௌத்த சிங்கள பேரினவாதத்தின் எழுச்சி காரணமாக, அவர்களது இருப்பு பாதிக்கப்பட்டது. குடும்பத்தோடு இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்து விட்டார்கள்.

 

“இலங்கை சிங்களவர்களுக்கான நாடாகி விட்டது. அதிலும் பௌத்த சிங்களவர்கள் மட்டுமே அங்கே வாழலாம்….” இவ்வாறு சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டார்கள். பௌத்த-சிங்கள பேரினவாதத்தை கடுமையாக எதிர்த்தாலும், அவர்கள் யாரும் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கவில்லை என்பது வியப்பை அளித்தது.

சிங்கள அரசை எதிரியாக பார்த்தார்கள், அதே நேரம் விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்தார்கள். அவர்களில் யாரும் பிரிவினையை ஆதரிக்கவில்லை.
பௌத்த சிங்கள பேரினவாதத்தை எதிர்க்கும், புலிகளையும் ஏற்காத, இந்த வகை தமிழர்களின் அரசியல் பின்னணி என்ன? கொழும்பில் வத்தளையில் இன்னமும் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ தமிழர்களிடம் அதற்கு விளக்கம் கிடைத்தது.

“முதன்முதலாக 83 கலவரத்தின் போது எமது வீடும் எரிக்கப்பட்டது… வத்தளையில் கிறிஸ்தவ குடியிருப்புகளை காடையர்கள் தாக்க மாட்டார்கள் என்று நம்பியிருந்தோம்…. ஏனென்றால் நாங்கள் தமிழர்கள் என்று ஒரு போதும் காட்டிக் கொண்டதில்லை…” அவர்களுடன் உரையாடிய பொழுது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. ஆங்கிலேய காலனிய காலத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கொழும்பில் குடியேறியவர்கள். போர்த்துக்கேயர் காலத்தில் இருந்து பரம்பரை கிறிஸ்தவர்கள். அதனால் அவர்கள் தம்மை கிறிஸ்தவ இனம் என்று அழைப்பதையே விரும்புகின்றனர். அதாவது, இலங்கையில் முஸ்லிம்கள் தனியான இனமாக கருதலாம் என்றால், இதுவும் சாத்தியமே.

 

இலங்கையில் கிறிஸ்தவ இன உருவாக்கத்திற்கு பல காரணிகள் உண்டு. காலனிய காலகட்டத்தில், சமூகப் படிநிலையில் வெள்ளையர்கள் மேலே இருந்தனர். அவர்களுக்கு அடுத்த நிலையில், கலப்பின பறங்கியரும், உள்ளூர் கிறிஸ்தவர்களும் இருந்தனர். அரச பதவிகளும், சலுகைகளும் அவர்களுக்கு கிடைத்து வந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில், இந்துக்களும், பௌத்தர்களும், முஸ்லிம்களும் முன்னுக்கு வருவது சிரமமமான விடயமாக இருந்தது. அந்த சமூகங்களில் நிலப்பிரபுக்களும், வியாபாரத்தில் ஈடுபட்டோரும் மட்டுமே செல்வந்தர்களாக இருந்தனர்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், கிறிஸ்தவ தமிழர்களின் செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டது. இதனால், தற்போதும் ஆங்கிலேயரின் பொற்காலத்தை எண்ணி பெருமூச்சு விடுகின்றனர். அவர்களுக்கு இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை, ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே.  ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரும் காலங்களில் தமது நலன்கள் பாதுகாக்கப் படும் என்று நம்புகின்றனர்.
நீர்கொழும்பில் இருந்து மொரட்டுவ வரையிலான, கொழும்பை உள்ளடக்கிய மேல்மாகாணம் “கிறிஸ்தவ பெல்ட்” என்று அழைக்கப் படுகின்றது. தேர்தல் வரும் காலங்களில், இந்தப் பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைக்கும். இலங்கையில் சனத்தொகை அடர்த்தி அதிகமாகவுள்ள மாகாணமும் அது தான். ஆகவே, தமிழ் கிறிஸ்தவர்களை விட, சிங்கள கிறிஸ்தவர்களே அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். இலங்கைக் கிறிஸ்தவர்கள், சிங்களவர், தமிழர், என்று மொழி அடிப்படையில் பிரிந்தனர். அதாவது சிங்கள-கிறிஸ்தவ , பௌத்த சிங்களவர்களுடன் கூட்டுச் சேர்ந்து, சிங்கள பேரினவாத கருத்தியலை உருவாக்கினார்கள்.

 

தமிழ் கிறிஸ்தவர்கள் மேலைத்தேய விசுவாசம் காரணமாக தேசிய அரசியலை புறக்கணித்தார்கள். தமிழ்த் தேசியம், மிகத் தாமதாகத் தான், இலங்கை அரசியல் அரங்கில் நுழைந்தது.
வத்தளையில் “தமிழ் பேசும் கிறிஸ்தவ இனத்தை” சேர்ந்தவர்களின் வீட்டில் விருந்தாளியாக அழைக்கப் பட்டிருந்தேன். விருந்து முடிந்த பின்னர் சாவகாசமாக உரையாடும் பொழுது, இனப்பிரச்சினை குறித்து அவர்கள் கருத்தை அறிய விரும்பினேன். “வேலை வேண்டுமானால் கட்டாயம் சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார்கள். அதுவே பிரச்சினையின் மூலகாரணம்.” என்றார்கள். “சிங்களத்திற்கு பதிலாக, அல்லது ஈழப் பிரதேசத்திலாவது தமிழை ஆட்சி மொழியாக்கினால் பிரச்சினை தீர்ந்திருக்குமா?” என்று கேட்டேன். “இல்லை, இல்லை… முன்பிருந்ததைப் போல ஆங்கிலமே அரச கரும மொழியாக தொடர்ந்திருக்க வேண்டும்.” என்று பதிலளித்தார்கள். ஈழம் கோரப்படும் பிரதேசங்களில், எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து தமிழே அலுவலக அல்லது கல்வி மொழியாக இருப்பதை சுட்டிக் காட்டினேன்

. தமிழில் படிப்பதையும், வேலை செய்வதையும் தரக்குறைவாக பார்ப்பது, அவர்களது பேச்சில் தெரிந்தது. இவர்கள் தமிழீழம் கேட்டால், ஆங்கிலத்தை உத்தியோகபூர்வ மொழியாக்கி இருப்பார்கள்.
குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சரளமாக ஆங்கிலம் பேசினார்கள். “ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம்” என்று குறிப்பிடுமளவிற்கு இலக்கண சுத்தமானது. “சிறு வயதில் தப்பித் தவறி தமிழில் பேசினால் அம்மா அடிப்பார் ….” என்று கூறினார், தனியார் நிறுவனம் ஒன்றில் காரியதரிசியாக பணியாற்றும் பெண். ஐரோப்பாவில் எனது வேலை குறித்தும் விசாரித்தார்கள்.

அவர்களது அரசியல் பாதை தமிழ்த் தேசியமல்ல, மாறாக ஆங்கில சர்வதேசியம், என்பதை தெளிவு படுத்தினார்கள். அவர்களின் குடும்பத்தில் பலர் கலப்புத் திருமணம் செய்திருந்தனர். சிங்கள முதலியார்கள், இஸ்லாமிய மூர்கள் ஆகிய சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களுடன் தான் உறவு கொண்டாடினார்கள்.

.
கொழும்பின் மத்திய பகுதியை அண்மித்து தான் பணக்கார வட்டாரமான கறுவாத் தோட்டம் இருக்கிறது. இலங்கையின் பெரும்புள்ளிகளும், அரசியல் தலைவர்களும் தமது ஆடம்பர வாசஸ்தலங்களை அங்கே அமைத்துள்ளனர். செல்வாக்கு மிக்கவர்கள் வாழும் பிரதேசம் என்பதால், அதியுயர் பாதுகாப்பு வலையமாக, எப்போதும் போலிஸ் காவல் இருக்கும்.

இருபது வருடங்களுக்கு முன்பு, சில மாத காலம் அந்த பகுதிக்கு அருகில் வசித்திருக்கிறேன். “(காலஞ் சென்ற) ஜனாதிபதி ஜே.ஆரின் வாசஸ்தலம் அருகில் இருப்பதால், நாம் பாதுகாப்பாக வாழலாம்,” என்று புதிதாக வருபவர்களிடம் கூறி தம்பட்டம் அடிப்போம்.

 

கறுவாத் தோட்டம் பகுதி முடியும் இடத்தில் பொரளை ஆரம்பமாகின்றது. பொரளை சந்தியை தொட்டுச் செல்லும் சாலையின் இரண்டு வர்க்கங்களை பிரிப்பதை நேரடியாகக் காணலாம். சாலையின் ஒரு பக்கம் பணக்காரர்களின் ஆடம்பர வீடுகள், மறுபக்கம் ஏழை மக்களின் சேரிகள். இரண்டுக்கும் இடையிலான தூரம் அதிகமில்லை. கொழும்பின் வேறு பிரதேசங்களை விட, பொரளையில் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு ஆதரவு அதிகம். அந்த வட்டாரத்தில் பெரும்பான்மையானோர் உழைக்கும் மக்கள். பொரளையில் தான் பிரசித்தி பெற்ற வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ளது. கொழும்பின் பெரிய சுடுகாடான “கனத்த மயானம்” இருப்பதும் அந்தப் பிரதேசத்தில் தான்.
உதாரணத்திற்கு, இலங்கை ஒரு லத்தீன் அமெரிக்க நாடாகவிருந்தால், ஏழைகளும், பணக்காரர்களும் இவ்வாறு அருகருகே வசிப்பது, வர்க்கப் போராட்டத்தை தூண்டி விட்டிருக்கும்.

 

இலங்கையில் அவ்வாறு எதுவும் நடக்காததற்கு காரணம், சிங்கள உழைக்கும் வர்க்க மக்கள் மனதில் ஊறியுள்ள இனவெறி. இலங்கை அரசியல்வாதிகள், தீர்க்கதரிசனத்துடன் இனவாதத் தீயை மூட்டி விட்டிருந்தார்கள். பொரளையில் வாழும் உழைக்கும் மக்களின் வழக்கமான முதலாளி வர்க்கம்  மீதான கோபத்தை, தமிழர்கள் மீது திருப்பி விட்டார்கள்.

இனக்கலவரம் வெடிக்கும் காலங்களில், பொரளை சேரியை சேர்ந்த காடையர்கள் சில கிலோமீட்டர் தள்ளியிருக்கும் தமிழ்க் குடியிருப்புகளை தாக்குவார்கள். கலவரத்தை தூண்டி விடுவதற்கு காரணம் கிடைப்பது தான் கஷ்டம். அதனை வழிநடத்துவது இலகு.
கொழும்பு நகரில் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்ற விபரத்தை, தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரே எடுத்து தருவார். அந்தப் பட்டியல் கட்சிக்கு விசுவாசமான தாதாக்களுக்கு கைமாற்றப்படும். தாதாக்கள் தமது அடியாட்படையுடன் சென்று தமிழர்களைத் தாக்குவார்கள். கண்ணில் கண்ட தமிழர்களை வெட்டிக் கொன்று, பெண்களை மானபங்கப் படுத்தி, வீடுகளை சூறையாடும் படலம் ஒரு சில நாட்கள் நீடிக்கும். அந்தக் கொடுமைகளை போலிசும் கண்டு கொள்ளாது.

 

இந்தியாவில், குஜராத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமும் இதே பாணியில் தான் நடைபெற்றது. கொழும்பு கலவரத்திற்கும், குஜராத் கலவரத்திற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை.
83 ம் ஆண்டு ஜூலை மாதம், கனத்த மயானத்தில் 13 இராணுவவீரர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டன. முதல் நாள் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவவீரர்கள் அவர்கள். அது ஒரு அரசுக்கெதிரான ஆயுதக்குழுவின் செயலாக இருந்த போதிலும், அனைத்து தமிழர்கள் மீதும் பழி விழுந்தது. சிங்களவர்களின் அனுதாபத்தை தமிழர்கள் மேலான துவேஷமாக மாற்றியதில், ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு கணிசமான பங்குண்டு.

 

கனத்த மயானத்தில் இருந்து கிளம்பிய காடையர் கூட்டம், அருகில் இருந்த நாரஹென்பிட்டிய தொகுதியை முதலில் தாக்கியது. நாரஹென்பிட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும், அருகிலும் நிறையத் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். சில அடுக்குமாடிக் குடியிருப்புகள் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு, அரசினால் ஒதுக்கப் பட்டிருந்தன.
அவ்வாறான இடத்தில் வாழ்ந்த தமிழர்கள் தாக்கப்பட்டனர் என்றால், மற்ற இடங்களைப் பற்றிக் கூறத் தேவையில்லை.

 

பொரளையில் கடும்பாதுகாப்புக்கு பெயர் போன வெலிக்கடை சிறைச்சாலையில், தமிழ்க் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகை உலுக்கியது. தமிழ்த் தேசிய விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் சம்பந்தப்பட்ட, பல்வேறு இயக்கங்களை சேர்ந்த நபர்கள் அங்கே அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஒரு வகையில், அரசே அந்தக் கொலைகளை திட்டமிட்டிருக்க வாய்ப்புண்டு. மரணதண்டனை நிறைவேற்ற முடியாத “ஜனநாயக அரசு”, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீர்த்துக் கட்டியிருக்கலாம். அர்ஜுனின் சினிமாப் படங்களில், தீவிரவாத வில்லன்களை நீதிக்கு புறம்பாக சுட்டுக் கொல்லும் தத்துவம், வெலிக்கடையில் நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கலாம்.
யாழ்ப்பாணத்தில், எனது பெற்றோரின் ஊரைச் சேர்ந்த பணக்கார குடும்பம் ஒன்றும் அந்தத் தொகுதியில் வசித்து வந்தது. கலவரத்தின் போது, அந்தக் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டு, சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அதைச் செய்தது வேறு யாருமல்ல. அந்த வீட்டில் வேலை செய்த சிங்கள பணியாளும், அவனது நண்பர்களும். பல சிங்கள அடித்தட்டு வர்க்க மக்கள், தமிழர்களைக் கொன்று, அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து செல்வம் சேர்த்துள்ளனர். சிங்கள ஏழைகள் தமக்கெதிராக கிளர்ந்தெழும் அபாயத்தை, சிங்கள பணக்கார வர்க்கம் சாதுர்யமாக தவிர்த்துக் கொண்டது. “தமிழர்கள் எல்லோரும் செல்வந்தர்கள். அதனால் தான் சிங்களவர்கள் ஏழைகளாக இருக்கின்றனர். தமிழர்கள் எல்லோரும் பதவிகளில் இருக்கின்றனர். அதனால் தான் சிங்களவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.” இத்தகைய தவறான பிரச்சாரங்கள், கல்வியறிவற்ற சிங்கள உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் இலகுவாக ஈடுபட்டது.

 

தமிழ்ப் பிரதேசங்களிலும் அது போன்ற மனப்பான்மை நிலவுவதை பிற்காலத்தில் தேர்ந்து கொண்டேன். “அரசு சிங்களவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது… அவர்களில் ஏழைகளே கிடையாது….” என்பன போன்ற தவறான கருத்துகளை தமிழ்த் தேசியவாதிகள் பரப்பி விட்டிருந்தனர்.
கொழும்பு நகரில் தமிழ்த் தேசிய கருத்தியல் கருக் கொண்ட, “குட்டி யாழ்ப்பாணம்” என்று அழைக்கப்படும், கொழும்பு நகரின் வெள்ளவத்தை தொகுதிக்குள் அடுத்து நுழைவோம்.

 

வெள்ளவத்தையில் அழகிய கடற்கரையோரம், சொகுசு பங்களாவில் வாழும் பாக்கியம் கிட்டியவர்கள் வெளிநாடு செல்லத் தேவையில்லை. அனைத்து வசதிகளும் அங்கே கிடைக்கும். அந்தப் பகுதியில் வீடு வாடகைக்கு எடுப்பது அதிகம் சம்பாதிப்போருக்கு மட்டுமே இயலுமான ஒன்று. ஆரம்ப காலங்களில் “பரம்பரைப் பணக்காரர்கள்” மட்டுமே வாழ்ந்து வந்தனர். போருக்குப் பின்னரான இடப்பெயர்வு காரணமாக, வெளிநாட்டுக் காசில் திடீர்ப் பணக்காரர் ஆனவர்களும் அங்கே குடியேறினார்கள். அதனால் தான் அதற்கு குட்டி யாழ்ப்பாணம் என்று பெயரிட்டனர்.
யாழ்ப்பாணத் தமிழர்களுடன், அவர்களது தனித்துவமான கலாச்சாரமும் புலம்பெயர்ந்து விட்டது. யாழ் நகரில் தெரு மூலைக்கு ஒன்றாக காணப்படும் “டியூட்டரிகளும்” வெள்ளவத்தையில் பெருகி விட்டன.

பனங்கள்ளில் இருந்து புழுக்கொடியல் வரை இறக்குமதியாகின. எனது வாழ்நாளில் கண்ட மாற்றங்கள் காரணமாக, ஒரு கேள்வி என் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. இனக்கலவரங்கள் யாவும் தென்னிலங்கையில் வாழும் தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்யும் நோக்கம் கொண்டவை.

 

முப்பதாண்டுகளாக நடந்த ஈழப்போர், தமிழர்கள் பிரிந்து செல்வதை வலியுறுத்திக் கொண்டிருந்தது. முரண்நகையாக, ஈழப்போரின் பின்னர் பெருந்தொகையான தமிழர்கள் கொழும்பு நகரில் வந்து குடியேறிக் கொண்டிருந்தனர். ஆனால், அங்கிருந்த படியே “தமிழீழமே தீர்வு!” என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் அப்போதே நாடு கடந்த தமிழீழம் என்ற கருத்தியல் தோன்றி விட்டது

நன்றி கலையகம் இணையம்.

 

செய்திகள்

எளிமையான வாழ்வு.

நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தான் அவன். பல டாக்டர்களைப் பார்த்தாகி விட்டது. குணமாகவில்லை. குடும்ப நண்பர் ஒருவர் வந்து சொன்னார்; ‘‘இந்த நோய்க்கு இந்த டாகடர் சிறப்பாக சிகிச்சை அளிப்பார். இவரைப் போய் பாருங்கள். நிச்சயம் நோய் குணமாகும்” என்றார்.

அவனை அழைத்துக் கொண்டு அந்த டாக்டரிடம் நம்பிக்கையோடு போனது குடும்பம். அவனைப் பரிசோதித்த பின் டாக்டர் சொன்னார், ‘‘அறுவை சிகிச்சை செய்தால், நோய் குணமாக 90 சதவீதம் வாய்ப்பிருக்கிறது. 10 சதவீதம் குணமாகாமல் போகவும் வாய்ப்பிருக்கு ஆனா ஒரே வழி அறுவை சிகிச்சைதான். அதைக் கண்டிப்பாகவும், அவசரமாகவும் செய்தே ஆக வேண்டும்’’ என்றார்.

‘‘அதுக்கு எவ்வளவு செலவாகும் டாக்டர்?’’ வார்த்தைகள் நடுங்கக் கேட்டார். அவனின் தந்தை.

‘‘மூன்று லட்சம்தான்’’ ஒரு வியாபாரியைப் போல் சாதாரணமாகச் சொன்னார் டாக்டர்.

ஒட்டு மொத்த குடும்பமும் இடிந்து போனது. ‘அவனுக்கு வந்திருக்கும் நோய் உயிர் குடிக்கும் நோய்’ என்று தெரிந்த போது, அதிர்ந்ததைவிடவும் அதிகமாகவே அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது அந்தக் குடும்பம். வீடு திரும்பிய பின் அவன் சிகிச்சை குறித்த கலந்துரையாடலில் அவனைத் தவிர்த்து அப்பா, அம்மா,  தங்கை மூவரும் இறங்கினர்.

‘‘என்னடி இது? மூணு லட்சம் ஆகுங்குகிறானடி டாக்டர்? என்ன பண்றது?’’ கேள்வியை அவன் தாயை நோக்கி வீசினார் தந்தை. ‘‘என்ன பண்றது? நம்மகிட்ட அவ்வளவு பணம் ஏது? இருக்கிற நகையை வித்துப் பணமாக்கினாலும் அவ்வளவு தேறாதே’’ அழுது கொண்டே தாயும் ஒரு எதிர்கேள்வியை வீசினார்.

‘நகையை வித்து வாற்ரபணம், பேங்குல இருக்கிற பணம், கொஞ்சம் கடன்னு வாங்கி, மூணு லட்சத்தைப் பொரட்டிடலாம். ஒரு வேளை குணமாகாமப் போச்சுன்னா, என்னடி பண்றது? அந்தப் பணம் எல்லாம் போன பிறகு இவ கல்யாணத்தை எப்படி நடத்துறது?’

தந்தையின் இந்தக் கேள்விக்கு, தாயிடம் இருந்த பதில் இல்லை. ‘ஓ’ என்ற அழுகை சத்தமே கேட்டது. தங்கை அமைதியாக அழுதாள். கடைசியாக, கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு ‘சிகிச்சை அளிப்பதல்லை’ என்று முடிவுக்கு வந்தது அந்தக் குடும்பம்.

ஆம், அவர்கள் ஆசையாய் வளர்த்த அன்பு மகனின் – மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நடுத்தரவர்க்கம் இப்படித்தான், முக்கியமற்ற விஷயத்திற்காக முக்கியமான விஷயத்தைக் கைவிட்டுவிடும்.

திருமணம் முக்கியமற்ற விஷயமா? திருமணம் முக்கியமற்ற விஷயமல்ல. திருமணத்திற்கான செலவுதான், முக்கியமற்ற விஷயம். நடுத்தர வர்க்கத்தின் மிகப் பெரிய பிரச்சினையே தண்ட செலவுகளை உள்ளடக்கிய திருமண முறையும், வரதட்சணையும் தான். இரண்டு நாட்கள் நடக்கும் திருமணத்தில் இவர்கள் கட்டிக் காப்பாற்ற நினைப்பது வெட்டி கவுரவத்தையே.

எந்த கவுரவத்தைக் காப்பாற்ற கடன் வாங்கித் திருமணத்தை நடத்தி முடிக்கிறார்களோ, பின்னால் அந்தத் திருமணக் கடனே , அவர்களின் கவுரவத்தை கேள்விக்குள்ளாக்கி, அவமானப்படுத்தி, கைகொட்டி சிரிக்கும்.

ஆணாதிக்கம் – வரதட்சணை என்கிற இந்த முரட்டுப் பந்தை எவ்வளவு பலம் கொண்டு பெண்கள் மீது வீசியடித்ததோ, வீசிய அதே வேகத்தில் திரும்ப ஆண்களையும் அது வீழ்த்திவிடுகிறது.

ஆம், நம் சமூக அமைப்பில் நான்கு பெண்களைப் பெற்ற நடுத்தர வர்கத் தகப்பன் முகத்தில் சிரிப்பைப் பார்க்கமுடியுமா? இரண்டு தங்கைகளின், அண்ணனிடம் இளமைக்குரிய குறும்புகளைப் பார்க்கமுடியுமா? இந்த வரதட்சணையும் அதிகமாக ஆட்டம் காட்டுவது நடுத்தர  வர்கத்திற்கேதான்.

எல்லா வகையிலும் தன் பெண்ணைவிட அதிகத் தகுதிகள் கொண்ட ஆணை வலைவீசித் தேடுவதே இவர்களின் வழக்கம். பெண்களுக்கும் அப்படித்தான்.

தன்னைவிட அறிவாளியாக, அதிகம் படித்தவனாக, அதிகம் சம்பாதிப்பவனாக, தன்னை விட அழகானவனாக  தன்னைவிட உயரமானவனாக  உள்ள ஒருவனே தனக்குக் கணவனாக வரவேண்டும் என்கிற அடிப்படையிலேயே கனவு காண்பவள். அந்தக் கனவு வசப்படுவதற்காக தன் கல்யாண காலத்தை எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் நீடித்துக்கொள்வார்கள்.

இந்த மனோபாவம் கொண்டதினாலேயே நடுத்தர வர்க்கத்துப் பெண், எந்த அளவிற்கு அதிகம் படிக்கிறகளோ, அதைவிட அதிகம் படித்த ஆணை நிறைய விலை கொடுத்து வாங்கவேண்டிய கால் விலங்கை அவளே பூட்டிக் கொள்கிறாள்.

தன் சம்பாத்தியம் என்ன? தன் தேவை என்ன? தன்னிடம் உள்ள பொருள் தனக்குப் போதுமானதா? என்கிற எண்ணத்தை விடவும், அடுத்தவரோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு ஓய்ந்து போகிற வர்க்கம் இந்த நடுத்தர வர்க்கம்.

இந்த ஒப்பீட்டில் அம்மா, அப்பா, மகன், மகள், தம்பி, அக்கா, அண்ணன், தங்கை, மனைவி, கணவன் என்று எந்த உறவுகளையும் இது விட்டு வைக்காது.

‘‘தங்கச்சி கல்யாணத்திற்கு மட்டும் எவ்வளவு நகை போட்டீங்க. கச்சேரி எல்லாம் வைச்சிங்க. என்னுடைய கல்யாணத்தை மட்டும் ஏம்மா பிச்சைக்காரி கல்யாணம் மாதிரி பண்ணிங்க’’ என்று கேள்வி கேட்கும். தன் நலனே பிரதானம் என்று வாழ்கிற வர்க்கம் இது.

இந்த உலகின் பெரிய பிரச்சனையே, ‘தன் வீட்டில் இன்னும் ஃபிரிட்ஜ் இல்லை. ஃபிரிட்ஜ் இருந்தால் வாஷிங் மிஷின் இல்லை. தனக்கு மோட்டார் சைக்கிள் இல்லை’  என்று இப்படி ஏதாவது ஒன்று ‘இல்லை’ என்பதே மாபெறும் கவலையாக உள்ள சமூகம்.

இப்படி அர்த்தமற்ற விஷயத்திற்காக உயிரே போவதுபோல் கவலைப்படுவதும், சின்னச் சின்ன விஷயத்திற்காக சண்டையிட்டுக் கொள்வதும், நடுத்திர வர்கத்தின் மிகப் பெரிய துயரம்.

மனித வாழ்வின் துயரம் என்ன என்பதை சரியாகப் புரிந்துக் கொள்ளாத வர்க்கம்.

உண்மையில் துயரம் என்றால் என்ன? இதோ இந்தப் பெண்ணின் வாழ்க்கையே சாட்சி.

women-workers.jpg ஊருக்கெல்லாம் வீடு கட்டி கொடுத்து விட்டு, வீதியில் வாழ்கிற மக்கள் இருக்கிறார்கள். அந்த மக்களில் ஒரு பெண். அவள் நிறைமாத கர்ப்பினி. நிறைமாத கர்ப்பத்தோடே கல் உடைத்தல், மண் சுமத்தல் என்று கடுமையான உடல் உழைப்பில் இருந்த பெண் அவள்.

கணவன், வேறு ஊரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அன்றும் அவள் வழக்கம் போல் வேலைக்கு சென்று தன் இருப்பிடமான சாலைக்குத் திரும்பியிருந்தாள்.

இரவு நடுநிசியில் பிரசவவலி. யார் உதவியும் இன்றி ஒரு அனாதையைப்போல் பிரசவமான அவளுக்கு, ‘நீ அனாதை இல்லையம்மா, உன் உயிரின் உறவு நான் இருக்கிறேன் ’ என்று தன் அழுகையால் பதில் சொல்வது போல் குழந்தை பிறந்தது. மயக்கமானாள் அந்தத் தாய்.

நேரம் கழிந்தது. மயக்கம் தெளிந்து ஆசையோடு தன் குழந்தையை பார்க்கிறாள். குழந்தையின் தலையை நாய் கடித்துப் போட்டிருந்தது. பிரசவ வலியால் அவள் இட்ட கூக்குரலை விடவும், பல மடங்கு அதிகமாகக் கதறினாள்.

ஆனால், அவள் கதறலைக் கேட்பதற்குக் காதுகள் இல்லை. அந்தத் தாயின் கண்ணீரைத் துடைக்க மனிதரும் இல்லை. கடவுளும் இல்லை. ஆம், அந்த இரவு விடிந்தது. அவளுக்கு மட்டும் இருண்டது.

இந்த சோகத்தால் மனம் உடைந்து அவள் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவில்லை. அதிலிருந்து மெல்ல, மெல்ல மீண்டாள். பழையபடி தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

வெளியூர் சென்று இருந்த கணவனும் வந்து சேர்ந்தான். அவள் வாழ்க்கை நம்பிக்கையோடு நகர்ந்தது. விசேஷம் என்னவென்றால், அவள் மீண்டும் கருவுற்றிருக்கிறாள்.

வருமை தருகிற துயரங்களோடு அவள் வாழ்க்கை நகர்ந்தாலும், நம்பிக்கையோடு இருக்கிறாள். அதனால் தன் வாழ்க்கையை அதிகம் நேசிக்கிறாள்.

ஆம், இன்பமானாலும் துன்பமானாலும் மனித வாழ்க்கை ரசனைக்குரியதல்லவா? சாகும்வரை சலிப்போடு வாழ்வது சரியா?

புத்துணர்ச்சி தரும் வசனத்துடன் உங்கள் மதி மாறன்

செய்திகள்

வழக்கு எண் 18 / 9 சினிமா விமர்சனம்.

காதல் கல்லூரி படங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு எதார்த்த, நடைமுறை கதையோடு களம் இறங்கி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். காதல் படத்தை ஒரு கோடியில் முடித்துத் தருவதாகக் ஷங்கரிடம் கூறி அதற்குள்ளாகவே முடித்து அதை மிகப்பெரிய வெற்றி படமாக்கி இருந்தார்.

 

                                                                                                                                         இந்தப்படத்தில் அந்தச் செலவு கூட  ஆகி இருக்காது போல அனைவரும         புதுமுகங்கள் இயல்பான இடங்கள் என்று திரைக்கதையை மட்டுமே நம்பி எடுத்து இருக்கிறார். கேமரா கூட டிஜிட்டல் கேமரா தானாம்.

இதில் இரு கதைகள் அந்த இரண்டையும் எந்த வித சிக்கலும் இல்லாமல் பொருத்தமாக இணைத்து மிக மிகச் சிறப்பாக திரைக்கதை அமைத்து இருக்கிறார். ஒரு கதை வேலு (ஸ்ரீ) என்கிற சிறுவன் குடும்ப நிலை காரணமாக வட மாநில முறுக்கு சுடும் வேலைக்கு சென்று பின் பல வருடங்கள் இருந்து அடிபட்டு சென்னை திரும்புகிறான் ஏதாவது வேலை செய்து பிழைக்க.

சென்னையில் ஆர்த்தி (மனிஷா) தினேஷ் (மிதுன்) 12 ம் வகுப்பு படிக்கும் இளசுகள். இவர்களிடையே ஏற்படும் இனக்கவர்ச்சி அதில் தினேஷ் எப்படி மொபைல் தொழில்நுட்பத்துடன் ஆர்த்தியை படம் பிடித்து மற்றவர்களுக்கு காட்டுகிறான் அதன் தொடர்ச்சி எங்கு சென்று முடிக்கிறது என்பது இன்னொரு கதை. இதில் ஆர்த்தி வீட்டில் பணி புரியும் பெண்ணாக ஜோதி (ஊர்மிளா) இந்த இரண்டு கதையில் உள்ளவர்களும் அருகிலே இருப்பதால் ஒருவருக்கொருவர் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். இதில் எதிலும் சம்பந்தப்படாமல் மாட்டிக்கொள்ளும் வேலைக்காரப் பெண் ஜோதி.

இதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள் யார் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள் என்பதை வகைப்படுத்தவே சிரமமாக உள்ளது. என்னைப்பொறுத்தவரை வேலு முதல் தினேஷ் இரண்டாவது ஆர்த்தி மூன்றாவது ஜோதி நான்காவதாக வருவார்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில். இதில் ஜோதி நான்காவது இடம் என்றாலும் சிறப்பாக செய்து இருக்கிறார் அவருக்கு நடிக்க கிடைத்த வாய்ப்புகள் குறைவு இவரும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.                                   வேலு அசல் தெருவோர பையனாகவே தெரிகிறார்.

பசியால் கீழே கிடக்கும் போதும், சிறையில் அழும் போதும், பொய் பேச தெரியாமல் இருப்பதும் இது போல கூறிக்கொண்டே போகலாம். கிடைத்த இடத்தில் எல்லாம் சிக்சர் அடித்து இருக்கிறார். தினேஷும் ஆர்த்தியும் இந்தக்கால இளசுகளை அப்படியே கண் முன் நிறுத்துகிறார்கள். அப்படியே என்றால் அப்படியே தான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் எப்படி தெரிந்தது? என்று. ஒரு பேட்டியில் பாலாஜி சக்திவேல் அவர்கள் இந்தப்படத்தில் உதவி இயக்குனர்கள் பங்கு அதிகம் அவர்கள் இல்லை என்றால் இவ்வளவு சிறப்பாக என்னால் எடுத்து இருக்க முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

 

எனவே கண்டிப்பாக இந்த விசயத்தில் அவர்கள் பெரும் உதவி செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அதிலும் தினேஷ் ஆர்த்தியை மடக்க செய்யும் செயல்கள் அதை தெரிந்தும் தெரியாதது போல காட்டி ரசிக்கும் ஆர்த்தி என்று நடைமுறை எதார்த்தத்தை அப்படியே பிரதிபலித்து இருக்கிறார்கள். இதைப்படித்துக்கொண்டு இருக்கும் பெற்றோர்கள் நிச்சயம் இந்தப்படத்தை பாருங்கள். உங்கள் வீட்டில் கூட ஒரு ஆர்த்தியோ தினேஷோ இருக்கலாம். செயல்பாடுகளில் கொஞ்சம் முன்னபின்ன இருக்கலாம் ஆனால் இவை போல 100 % நடக்கிறது. இதில் தினேஷ் கொண்டு வரும் மொபைல் காணொளியை பார்த்து அவனை உற்சாகப்படுத்தும் நண்பர்கள், ஆர்த்தியை உசுப்பேற்றும் நண்பிகள் எல்லாம் தெருக்கு தெரு இருக்கிறார்கள்.

இவர்கள் இல்லாமல் மனதில் நிற்கும் பாத்திரங்களாக வேலுவின் நண்பனாக வரும் கூத்துப் பட்டறை பையன், காவல்துறை அதிகாரியாக வரும் குமாரவேல் (இவர் காதல் படத்தில் சார் பதிவாளாராக வருவார்), பாலியல் தொழிலாளி, வேலு வேலை செய்யும் பிளாட்பார கடை முதலாளி என்று பலர் மிக மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். இதில் அந்த சிறுவன் பேசும் பேச்சுக்கு திரையரங்கில் பலத்த கைதட்டல். குமாரவேல் அப்படியே நிஜ காவல்துறை அதிகாரி போலவே பேசுகிறார்.

பாடல்கள் இரண்டு ஆனால் பின்னணி இசை இல்லாமல். இதனாலே படத்தின் நீளம் குறைவு. படத்தின் பின்னணி இசை அவ்வளவாக திருப்தி இல்லை.

குறைகள் என்று எதையும் பெரிதாக குறிப்பிட முடியவில்லை. சில இடங்களில் கேமராவை கதாப்பாத்திரங்களின் உடலில் கட்டி விட்டு கேமரா இவர்கள் முகத்தை பார்த்தது போல வைத்து இருக்கிறார்கள் இதனால் அவர்கள் இயல்பாக நடக்க முடியாமல் சிரமப் படுகிறார்கள். பார்க்கவும் நன்றாக இல்லை. இதை தவிர்த்து இருக்கலாம். நான் பார்த்த வரை பலரும் இந்தப்படத்தை ஆஹா ஓஹோ என்று அளவுக்கு மீறி புகழ்வது போல தெரிகிறது. இது நல்ல படம் தான் என்றாலும் அனைவரும் கொடுக்கும் ஹைப் அதிகம் என்றே கருதுகிறேன்.

அனைவரும் பார்க்க வேண்டிய படம் குறிப்பாக மாணவர்கள், பெற்றோர்கள்.

Directed by Balaji Sakthivel Produced by N. Subash Chandrabose, Ronnie Screwvala Written by Balaji Sakthivel Starring Mithun Murali, Sri, Urmila Mahanta, Manisha Yadav Music by R. Prasanna Cinematography S. D. Vijay Milton Editing by Gopi Krishna Studio Thirupathi Brothers, UTV Motion Pictures Release date(s) May 4, 2012 Running time 115 minutes

எழுத்து - கிரி.

சினிமாசெய்திகள், செய்திகள்

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதி.

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பிரான்கொய்ஸ் ஹொலண்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்டவருமான சர்கோஷி இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த மாதம் 28 ஆந்திகதி நடைபெற்றது. அதில் சோசலிஸக் கட்சியைச் சேர்ந்த ஹொலண்ட் 28.6 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட நிக்கோலஸ் சர்கோசி 26.2 சதவீத வாக்குகளை பெற்றார்.

இதையடுத்து 2ஆம் கட்டத் தேர்தல் நேற்று நடைபெற்றது. பிரான்ஸ் நாட்டு சட்டப்படி தேர்தலில் 20 சதவீதத்துக்கும் மேல் பெறுபவர்கள் 2ஆவது கட்டத் தேர்தலில் போட்டியிட முடியும். அதன்படி 2ஆம் கட்டத் தேர்தலில் இவர்கள் இருவர் மட்டுமே களத்தில் இருந்தனர். முதல்கட்டத் தேர்தலில் சர்கோஸி பின்தங்கியதால், 2அம் கட்ட தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றிபெற, அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணிவரை நடந்தது. இதையடுத்து 2 மணி நேரம் கழித்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி சர்கோஸிக்கு 48 சதவீத வாக்குகளும், பிரான்கொய்ஸ் ஹொலண்டுக்கு 52 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இதன்படி சோசலிச கட்சியின் பிரான்காய்ஸ் ஹோலண்ட் வெற்றி பெற்றார்.

பிரான்சின் அடுத்த ஜனாதிபதியாக பிரான்கொய்ஸ் ஹொலண்ட் பதவியேற்க உள்ளார். கடும் போட்டியுடனான இத்தேர்தலில், சிறிய வித்தியாசத்தில் சார்கோஸி தோல்வி அடைந்திருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினை, ஆப்கானிஸ்தான் போர்முனையில் பிரான்ஸ் இராணுவம் தொடர்ந்து நிலை கொண்டிருப்பது போன்றவை இத்தேர்தல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தியிருப்பதாகத் தெரிகின்றது.

சார்கோஸி மீதான வெறுப்புணர்வினாலேயே மக்கள் ஹோலண்டுக்கு வாக்களித்துள்ளதாகவும், ஹோலண்ட் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளை, அவருடைய அடுத்த ஐந்து வருட பதவிக்காலத்தில் நிறைவேற்றுவதென்பது மிகக் கடினமானது என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

செய்திகள்

Vladimir Putin sworn in as Russia’s president

Russia’s President-elect Vladimir Putin is being inaugurated as the new head of state. Putin is an inauguration champion – he has played the main role in the performance three times out of six to have taken place in modern history.

The inauguration ceremony traditionally took place in the Grand Kremlin Palace and lasted for around 40 minutes.

Six federal TV channels broadcasted it live. Cranes with video cameras have been installed near the Kremlin to film the presidential motorcade driving.

Around 2,000 people have been invited to the event. RT presenter Bill Dod is among those invited and will bring all the details about the ceremony and the banquet from our studio in Moscow.

The guests are not supposed to wear white ties or evening gowns: just smart dresses and dark suits. Only those who received an invitation card can get access – there is no chance to buy a ticket.

Among those invited are members of upper and lower houses of the Russian parliament, Constitutional Court judges, government officials, federal authorities and representatives of the diplomatic corps.

Heads of foreign states have never been invited according to tradition.

The event started with flag bearers entering magnificent Andreyevsky Hall of the palace, where the inauguration takes place, carrying the Russian flag, the Constitution and the presidential standard and insignia. The chairman of the Constitutional Court placed them on the tribune.

At 11:55 am the president-elect arrived to the Kremlin through the gates of the Spasskaya Tower and walked through the splendid halls of the Grand Kremlin Palace with Kremlin clocks chiming in the background.

Then the chairman of the Constitutional Court requested the newly-elected head of the state to take the oath of office. With the right hand on the Russian Constitution Vladimir Putin swore allegiance to the Russian people.

The text of the oath reads as follows: “In the exercise of the powers of the President of the Russian Federation I vow to respect and uphold the rights and freedoms of the individual and citizen, observe and protect the Constitution of the Russian Federation, defend the sovereignty, independence, security, and integrity of the state, and serve the people in good faith.”

செய்திகள்

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! “ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் ப…ோக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும்” கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும்.
உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா…! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே…. இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிறது. ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும்
ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை! நன்றி: இனியவன்
சமையல் குறிப்புக்கள்

தடைகளை தாண்டி…சாமாதானத்தை நோக்கி…..

இலங்கை அரசுடன் தடைபட்டுள்ள பேச்சுவார்த்தை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் மாகாணங்களில் அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை அந்நாட்டு அரசுடன் நடைபெற்று வந்தது. மாகாணங்களுக்கு காவல் அதிகாரம் வழங்குவது உள்பட பல்வேறு விவகாரங்கள் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பேச்சுவார்த்தை நின்று போனது. மேலும், அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்றும் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நின்று போன பேச்சுவார்த்தை விரைவில் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்ற தேர்வுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்வதற்கு முன்பாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்திகள்